3 ஆண்டாக மூடியிருந்த ஸ்ரீரங்கம் கிழக்கு வாசல் கோபுரம் ஞாயிற்றுக்கிழமை திறப்பு

3 ஆண்டாக மூடியிருந்த ஸ்ரீரங்கம் கிழக்கு வாசல் கோபுரம் ஞாயிற்றுக்கிழமை திறப்பு

படங்கள்:  ர.செல்வமுத்துகுமார்

Updated on
1 min read

ஸ்ரீரங்கம்: கடந்த 3 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் கிழக்கு வாசல் கோபுரம் நாளை (ஆக.9) பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்படுகிறது.

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலின் கிழக்கு நுழைவாயிலில் உள்ள தாமோதர கிருஷ்ணன் கோயில் கோபுரத்தின் கொடுங்கை எனப்படும் முன்புற வளைவுப்பகுதி கடந்த 2023-ஆம் ஆண்டு ஆக.5-ஆம் தேதி நள்ளிரவில் திடீரென இடிந்து விழுந்தது.

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் அடிக்கடி சென்று வரும் பாதையில் நள்ளிரவு நேரம் என்பதால் மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. அதேநேரத்தில் கோபுரத்தை சீரமைப்பதாக கூறி கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து இப்பாதை அடைக்கப்பட்டிருந்தால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.

குறிப்பாக, வைகுண்ட ஏகாதசி போன்ற பெருவிழா காலங்களில் பக்தர்கள், பொதுமக்கள் கோயிலுக்கு எளிதாக சென்றுவர முடியாத நிலை இருந்து வந்தது. எனவே, கிழக்குவாசல் கோபுரத்தை உடனே சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடவேண்டுமென்று தொடர்ந்து மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.

கோபுர சிற்ப வல்லுநர்கள், தொல்லியல் துறை அதிகாரிகள், ஸ்தபதிகள் கொண்ட வல்லுநா்கள் குழுவின் வழிகாட்டுதலின் படி பழமை மாறாமல் புனரமைப்புப் பணிகள் நடப்பதாக கோயில் நிர்வாகம் கடந்த மூன்று ஆண்டுகளை கடத்தியது.

இந்நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தவெக அரசில் புதிதாக பொறுப்பேற்றுள்ள இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் எஸ்.ரமேஷ் இக்கோபுரத்தை 2 முறை நேரடியாக ஆய்வு மேற்கொண்டு பணிகளை துரிதப்படுத்தினார்.

அதையடுத்து கடந்த 2 மாதங்களாக போர்க்கால அடிப்படையில் பணிகள் துரிதமாக நடைபெற்றன. தற்போது பணிகள் முழுவதுமாக நிறைவடைந்த நிலையில், நாளை (ஆக.9) காலை 8 மணிக்கு கோபுரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எஸ்.ரமேஷ் கோபுர பாதையை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கிறார். கோபுர திறப்பு விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் உள்ளிட்ட கோயில் பணியாளர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

3 ஆண்டாக மூடியிருந்த ஸ்ரீரங்கம் கிழக்கு வாசல் கோபுரம் ஞாயிற்றுக்கிழமை திறப்பு
கரூர்: குடிநீர் பிரச்சினைக்காக சமூக ஆர்வலர் குடும்பத்துடன் உண்ணாவிரதம் - கிட்டிய உடனடி தீர்வு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in