

கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு மின்னொளியில் காட்சியளித்த திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை (நவ.15) நடைபெறுகிறது. இதையடுத்து, திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 10-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. நான்காம் நாளான நேற்று காலை யாகசாலையில் சுவாமி ஜெயந்திநாதர் மற்றும் வள்ளி, தெய்வானை அம்பாள்களுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது. பின்னர், வள்ளி, தெய்வானையுடன் சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்துக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை (நவ.15) ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு நடைதிறப்பு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், அதிகாலை 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், பகல் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடைபெறும்.
பகல் 12.45 மணிக்கு யாகசாலையில் இருந்து ஜெயந்திநாதர் எழுந்தருளி, வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு முதலிய பாடல்களுடன், மேளவாத்தியங்களுடன் சண்முகவிலாசம் சேர்தலும், தொடர்ந்து தீபாராதனையும் நடைபெறும்.
பிற்பகல் 2 மணிக்கு மேல் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில், ஜெயந்திநாதருக்கு அபிஷேக, அலங்காரம் நடைபெறும். மாலை 4 மணியளவில் ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்காக கடற்கரையில் எழுந்தருள்வார். அங்கு சூரசம்ஹாரம் நடைபெறும். இந்நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
நவம்பர் 16-ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு தெய்வானை அம்மன் தபசுக்கு புறப்படுதல், மாலை 6 மணிக்கு அம்மனுக்கு, சுவாமி காட்சி கொடுத்து, மாலை மாற்றுதல், இரவு 11 மணிக்கு மேல் சுவாமிக்கும், தெய்வானை அம்மனுக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெறும்.
சூரசம்ஹாரத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் திருச்செந்தூரில் குவியத் தொடங்கியுள்ளனர். பக்தர்களுக்கு தேவையான வசதிகளை கோயில் நிர்வாகம், மாவட்ட நிரவாகம், காவல் துறை, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட அனைத்து துறைகளும் இணைந்து செய்துள்ளன. ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், இணை ஆணையர் அருணாச்சலம் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.