

குமுளி: சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிப்பதற்கான தங்க அங்கி ஊர்வலம் வரும் 23-ம் தேதி ஆரன்முலா பார்த்தசாரதி கோயிலில் இருந்து புறப்பட்டு 26-ம் தேதி சந்நிதானத்தை வந்தடைகிறது. அன்று பிற்பகலில் 18-ம் படியேற பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் 41 நாள் தொடர் வழிபாட்டுக்கு பிறகு டிச.27-ம் தேதி மண்டல பூஜை நடைபெற உள்ளது. அன்று ஐயப்பனுக்கு 451 பவுன் எடை கொண்ட தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெறும். இதற்காக 23-ம் தேதி பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள ஆரன்முலா பார்த்தசாரதி கோயில் இருந்து தங்க அங்கி ஊர்வலமாக கிளம்பும்.
இதற்காக திருஆபரணப் பெட்டியில் அங்கி வைக்கப்பட்டு பல்வேறு ஊர்கள் வழியே கொண்டுவரப்பட உள்ளது. அன்று அதிகாலையில் தங்க அங்கி பக்தர்கள் பார்வைக்காக வைக்கப்படும். பின்பு மேளதாளம் முழங்க, சிறப்பு வழிபாடுகளுடன் இந்த ஊர்வலம் தொடங்கும். தொடர்ந்து மூர்த்தி கணபதி கோயில், புன்னந்தோட்ட தேவி கோயில், சவுட்டுக்குளம் மகாதேவ கோயில், இலந்தூர் கணபதி கோயில் வழியாக ஓமல்லூர் ஶ்ரீ ரத்தகண்ட ஸ்வாமி கோயிலை வந்தடையும்.
டிச. 24-ல் புறப்பட்டு வெட்டூர் ஸ்ரீ மகாவிஷ்ணு கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்கள் வழியே இரவு கோனி முரிங்கமங்கலம் சந்நிதானத்தை வந்தடைகிறது. டிச. 25-ல் ஊர்வலம் மீண்டும் மண்ணாரக்குளஞ்சி, வடசேரிக்கரை வழியாக பெருநாடு சாஸ்தா கோயிலை வந்தடையும். 26-ம் தேதி பிளாப்பள்ளி, நிலக்கல் வழியாக மதியம் 3 மணிக்கு பம்பையை வந்தடைய உள்ளது.
கணபதி கோயிலில் வழிபாட்டுக்குப் பிறகு சரம்குத்தியில் இருந்து திருஆபரணப்பெட்டி யானை மீது ஏற்றிச் செல்லப்படும். தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு பெற்றுக் கொள்வார். பின்பு 18-ம்படி வழியே கொண்டு செல்லப்பட்டு மாலை 6.30 மணிக்கு ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும்.
தங்க அங்கி கொண்டு செல்லப்படுவதால் 26-ம் தேதி பிற்பகலில் 18-ம் படி ஏற பக்தர்களுக்கு அனுமதி இல்லை. மறுநாள் 27-ம் தேதி தங்கஅங்கியுடன் கூடிய ஐயப்பனுக்கு மண்டல பூஜை சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அன்று இரவு கோயில் நடை சாத்தப்படும்.
தங்க அங்கி ஊர்வலமாக புறப்பட உள்ளதை தொடர்ந்து இதன் வழித்தடங்களில் உயர் பாதுகாப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. துப்பாக்கி ஏந்திய போலீஸார் முன்னிலையில் இந்த ஊர்வலம் நடைபெறும். வழியில் உள்ள ஆலயங்களில் திருஆபரணப்பெட்டி ஊர்வலத்தை வரவேற்க சிறப்பு வழிபாடுகள் செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.