

கோப்புப்படம்
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மினி பிரம்மோற்சவம் என்றழைக்கப்படும் ரத சப்தமி விழா திருமலையில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு சூரிய பிரபை வாகனத்துடன் தொடங்குகிறது.
இதனைத் தொடர்ந்து, காலை 9 மணிக்கு சின்ன சேஷ வாகனம், 11 மணிக்கு கருட வாகனம், மதியம் 1 மணிக்கு அனுமன் வாகன சேவை நடைபெறுகிறது.
மதியம் 2 மணி முதல் 3 மணி வரை சக்கர ஸ்நான நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மாலை 4 மணிக்கு கற்பக விருட்ச வாகனம், 6 மணிக்கு சர்வபூபால வாகனம், இரவு 8 மணி முதல் 9 மணி வரை சந்திரபிரபை வாகன சேவையுடன் இந்நிகழ்ச்சி நிறைவடையும். சாமானிய பக்தர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அனைத்து ஆர்ஜித சேவைகளையும் தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. ஆதலால் எந்தவித டோக்கன்களும் இல்லாமல் 3 நாட்களும் பக்தர்கள் தர்ம தரிசனம் செய்யலாம்.
சுமார் 2 லட்சம் பக்தர்கள் அமர்ந்து வாகன சேவையை ரசிக்கும் விதத்தில் 4 மாட வீதிகள் தயார் செய்யப்பட்டுள்ளன. மேலும் பக்தர்களுக்கு குடிநீர், பால், அன்னபிரசாதம் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மாட வீதிகளில் 85 இடங்களில் அன்னதானம் வழங்கப்பட உள்ளது. 14 வகை உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேலும், அவசர மருத்துவ பிரிவினர், ஆம்புலன்ஸ், தீயணைப்பு படை வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.