

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று பாதுகாப்புக்குப் பொறுப்பேற்றுக் கொண்ட மத்திய விரைவு அதிரடிப்படை குழுவினர்.
குமுளி: சபரிமலையில் பக்தர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த விரைவு அதிரடிப்படைக் குழு நேற்று பொறுப்பேற்றுக் கொண்டது. பக்தர்கள் உடனடி முன்பதிவை நம்பி வர வேண்டாம் என்று தேவசம் போர்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல வழிபாடு தொடங்கியதில் இருந்தே உடனடி முன்பதிவு மூலம் வரைமுறையின்றி பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். மேலும், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தவர்களும் உரிய தேதியில் வராமல் வேறு நாட்களில் தரிசனத்துக்கு வந்தனர். இதனால் கடும் நெரிசல் ஏற்பட்டது.
கேரள உயர் நீதிமன்ற உத்தரவின்படி `ஸ்பாட் புக்கிங்' 5 ஆயிரமாக குறைக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த சில நாட்களாக சபரிமலையில் நெரிசல் குறைந்துள்ளது. வரும் 25-ம் தேதி முதல்இந்த நடைமுறையில் மாறுதல் இருக்கலாம். இந்நிலையில், சபரிமலை பாதுகாப்புக்காக மத்திய அரசின் விரைவு அதிரடிப் படைக் குழு (ரேபிட் ஆக்சன் ஃபோர்ஸ்) சபரிமலை வந்தது.
கொல்லத்தைச் சேர்ந்த துணைத் தளபதி பிஜுராம் தலைமையில் 140 பேர் கொண்டகுழு நேற்று பாதுகாப்புக்குப் பொறுப்பேற்றுக் கொண்டது. இதேபோல, கோயம்புத்தூரில் இருந்தும் மத்தியப்படை வந்துள்ளது. இவர்கள் சுழற்சி முறையில் 3 ஷிப்ட்களில் பணியாற்றி வருகின்றனர். மகரவிளக்கு பூஜை முடியும் வரை இக்குழுவினர் இங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர்.
இவர்களுக்கு நேற்று சந்நிதானத்தில் பிராந்திய மொழியைக் கையாளுதல் குறித்த தொடக்கநிலை பயிற்சி அளிக்கப்பட்டது. சபரிமலைக்கு தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா,தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து அதிக பக்தர்கள் வருகின்றனர். ஆகவே, அந்தந்த மாநில மொழிகளில் பக்தர்களை ஒழுங்குபடுத்துவதற்கான வார்த்தைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், சபரிமலை தரிசனத்துக்கான முன்பதிவுகள் டிசம்பர் வரை நிறைவடைந்தன. ஆன்லைன் பதிவுதாரர்கள் மட்டுமே சுவாமி தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. வர இயலாதவர்கள் முன்பதிவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அந்த இடம் உடனடி முன்பதிவுக்கு மாற்றப்படும். எனினும், ஸ்பாட் புக்கிங்கை முழுமையாக நம்பிவர வேண்டாம் என்று தேவசம் போர்டு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறும்போது, "உடனடி முன்பதிவுக்கு பல மணி நேரம் காத்திருந்தால் மட்டுமே அனுமதி அளிக்கப்படும். குழுவுடன் இணைந்து செல்லும்போது, குறித்த நேரத்தில் கிளம்புவதில் சிரமம் ஏற்படலாம்" என்றனர்.