

கருவடிக்குப்பத்தில் ராமகிருஷ்ண மடத்தின் புதுச்சேரி கிளை திறக்கப்பட்டு, அங்கு நடந்த சிறப்பு வழிபாட்டில் ராமகிஷ்ண மடம் மற்றும் மிஷனின் தலைவர் ஸ்ரீமத் சுவாமி கவுதமானந்தஜி மகாராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். படம்: எம்.சாம்ராஜ்
புதுச்சேரி: புதுச்சேரி கருவடிக்குப்பத்தில் 18,609 சதுர அடியில் சென்னை ராமகிருஷ்ண மடத்தின் புதிய கிளை மடம் நிறுவப்பட்டுள்ளது. தன்னார்வலர்கள் நன்கொடை ரூ.20 கோடியில் இந்த மடம் அமைக்கப்பட்டள்ளது. இங்கு ராமகிருஷ்ணர் கோயில், அன்னை சாரதா இல்லம், சேவை மைய கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளன.
இங்குள்ள கோயிலில் நாள்தோறும் காலை மங்களாரத்தி, மாலை ஆரத்தி, பூஜைகள், வேத மந்திர உச்சாடனம், பூஜைகள், ஆன்மிக சொற்பொழிவுகள் நடைபெறும். அன்னை சாரதா இல்லத்தில் சாதுக்கள் தங்கும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. தரைத்தளத்தில் சமையலறை, உணவருந்தும் அறைகள் உள்ளன.
சேவை மைய கட்டிடத்தில் முதல் மற்றும் 2-ம் தளத்தில் தொண்டு மருந்தகம் அமைந்துள்ளது. இங்கு இலவச மருத்துவ ஆலோசனை, ரத்த மாதிரி சேகரிப்பு, டிரெஸ்ஸிங், சித்த மருத்துவ அறை, கண் மருத்துவ அறை, ஆய்வகம், பல் மருத்துவம், பிசியோதெரபி, எக்ஸ்ரே சேவைகளும் அளிக்கப்பட உள்ளது. மூன்றாவது தளத்தில் சுவாமி விவேகானந்தர் ஒழுக்கம், மனித வள மேம்பாட்டு மையம், கணினி பயிற்சி, நெறி வளர்ச்சி வகுப்புகள், இலவச நூலகம் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த ராமகிருஷ்ண மடத்தின் புதிய கிளை மடம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று முன்தினம் வாஸ்துஹோமம், கணபதி ஹோமம் நடைபெற்றது. இந்நிகழ்வில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பங்கேற்றார்.
நேற்று நடைபெற்ற ராமகிருஷ்ண மடம் திறப்பு விழாவில் ராமகிஷ்ண மடம் மற்றும் மிஷனின் தலைவர் ஸ்ரீமத் சுவாமி கவுதமானந்தஜி மகாராஜ் கலந்து கொண்டு திறந்து வைத்தார். தொடர்ந்து சிறப்பு பூஜை நடந்தது.
பின்னர் ஸ்ரீமத் சுவாமி கவுதமானந்தஜி மகாராஜ் ஆசியுரை வழங்கி பேசும்போது, “இந்த உலகம் ஒரு கனவு போன்றது. நாளை, நாளைக்கு மறுநாள் என்று மாறிக் கொண்டே இருக்கும். அதனால் நாம் மட்டும் வாழ்ந்தால் போதாது. 4 பேர் வாழ்வதற்கு உதவி செய்ய வேண்டும்.எங்கிருந்து நாம் வந்தோம்? எங்கு போய் சேர இருக்கிறோம்..? எப்போது போகிறோம்..? என்பதை யாராலும் சொல்ல முடியாது. நடுவில் கொஞ்சம் நாள் இங்கு இருக்கிறோம்
ஸ்ரீ ராமகிருஷ்ணர், அன்னை சாரதாதேவி மீது நம்பிக்கை வைத்து அன்பு காட்டினால் பகவான் காப்பாற்றுவார். நம்மை வழிநடத்த ஸ்ரீ ராமகிருஷ்ணர் இங்கு வந்திருக்கிறார்.
இறைவனை நினைத்தபடி செயலாற்றினால் மகிழ்ச்சியோடு இந்த உலகத்தில் வாழலாம். வாழ்க்கையில் நல்லதும் வரும்; கெட்டதும் வரும். என்ன கஷ்டம் வந்தாலும் ஸ்ரீ ராமகிருஷ்ணரிடம் எடுத்துச் சொல்லுங்கள். ‘சக்தி, பக்தி, முக்தி’ கிடைக்கும், இவ்வாறு அவர் பேசினார்.
புதுச்சேரி ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் பொறுப்பாளர் சுவாமி நித்தேஷானந்தா, புதுச்சேரி அரசின் தலைமைச் செயலர் சரத் சவுகான், பத்மபூஷண் நல்லிகுப்புசாமி மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த சுவாமிகள், நிர்வாகிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர். இங்கு அமைக்கப்பட்டுள்ள சேவை மையக் கட்டிடத்தை முதல்வர் ரங்கசாமி மாலையில் திறந்து வைத்தார்.