மும்பையில் சிஜேபி போராட்டம்: நடிகர் இம்ரான் கான், நடிகை லேகா வாஷிங்டன் கைது

மும்பையில் சிஜேபி போராட்டம்: நடிகர் இம்ரான் கான், நடிகை லேகா வாஷிங்டன் கைது
Updated on: 
1 min read

மும்பை: மும்பையில் போராட்டத்தில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர் இம்ரான் கான், நடிகை லேகா வாஷிங்டன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரியும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகளில் முறைகேடுகள் நடப்பதாகக் குற்றம் சாட்டியும் காக்ரோச் ஜனதா கட்சி சார்பில் அறிவிக்கப்பட்ட போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மும்பையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இப்போராட்டத்தின் ஒரு பகுதியாக ஆகஸ்ட் கிராந்தி மைதானத்தில் கலந்து கொண்ட பிரபல பாலிவுட் நடிகர் இம்ரான் கான், அவரது தோழியும் நடிகையுமான லேகா வாஷிங்டன் உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்டோர் மும்பை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்படுவதற்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் இம்ரான் கான், தான் எத்தகைய கோரிக்கைகளையும் முன்வைக்கவில்லை என்றும், இந்த நகரத்தில் வசிக்கும் ஒரு குடிமகனாகவே தான் இங்கு வந்துள்ளதாகவும் தெரிவித்தார். மக்களின் சுதந்திரம் ஏன் கட்டுப்படுத்தப்படுகிறது, குரல்கள் ஏன் ஒடுக்கப்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்ளவே தான் அங்கு வந்ததாக குறிப்பிட்ட அவர், தான் எந்தவொரு அமைப்பையும் சார்ந்தவர் அல்ல என்றும் ஒரு குடிமக்களின் பிரதிநிதியாகவே கலந்துகொண்டதாகவும் கூறினார்.

கைது செய்யப்பட்டு காவல்துறை வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்ட போது, இம்ரான் கான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் "நான் ஒரு டிரைவ் சென்று கொண்டிருக்கிறேன் போலிருக்கிறது" எனக் குறிப்பிட்டு ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அவருடன் லேகா வாஷிங்டனும் இருந்தார். இம்ரானின் சகோதரியான நடிகை ஜைன் மேரி தனது சமூக வலைதளப் பக்கத்தில், இம்ரானின் முதல் படமான 'ஜானே து யா ஜானே நா' படத்தில் அவர் காவல்துறையினரால் கைது செய்யப்படும் காட்சியை நினைவூட்டும் வகையில் பதிவிட்டுள்ளார்.

மும்பையில் சிஜேபி போராட்டம்: நடிகர் இம்ரான் கான், நடிகை லேகா வாஷிங்டன் கைது
‘அபிஜித் தீப்கேவை டெல்லி போலீஸ் கடத்திச் சென்றுவிட்டது’ - சிஜேபி குற்றச்சாட்டு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in