

புனித ரமலான் மாதத்தை இறைவன் அடையாளப்படுத்தும்போது, ‘ரமலான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (சத்தியத்தையும், அசத்தியத்தையும்) பிரித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் அருளப்பட்டது’ என்று கூறுகிறார்.
ஆண்டின் பன்னிரண்டு மாதங்களில் ரமலான் பிரதானமானது. இம்மாதத்தில்தான் தீய சாத்தான்களுக்கு விலங்கிடப்படுகிறது.
சுவனத்தின் வாயில்கள் திறக்கப்பட்டு நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன. இம்மாதத்தில் செய்யப்படும் வணக்க வழிபாடுகள் ஏனைய நாட்களில்; செய்யப்படு வதைவிடப் பன்மடங்கு அதிக நன்மைகளை ஈட்டித் தருகின்றன. பாவமன்னிப்புக்கான நீண்ட வாய்ப்பு வழங்கப்படுகின்றது. தவறு செய்பவர்கள் திருந்தி தமது வாழ்க்கைத் திசையை நல்வழி நோக்கித் திருப்புவதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்படுகின்றது. இவ்வாறு எண்ணற்ற சிறப்புகளை இம்மாதம் கொண்டிருந்தபோதிலும், அடிப்படையான சிறப்பு அல்குர்ஆன் அருளப்பட்டதாகும்.
பிறிதோர் இடத்தில், அதனை கண்ணியமிக்க இரவில் இறக்கியதாகவும், அந்த இரவு ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்தது, அருள் வளம் பொதிந்தது என்றும் இறைவன் கூறுகிறான். அல்குர்ஆன் அருளப்பட்ட மாதத்துக்கும், இரவுக்கும் ஏன் இத்தகைய பெருமை என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.
அல்குர்ஆன் சாதாரண நூல் அல்ல. அது சர்வ லோகங்களின் இரட்சகனிடமிருந்து இறக்கப்பட்டது. அதனைச் சுமந்து வந்தவானவர் கோமான் ஜிப்ரீலும் சாதாரணமானவரல்ல. அதனைப் பெற்று மனித குலத்துக்குப் போதித்து நடைமுறைப்படுத்தியவர். படைப்பினங்களில் சிறந்த இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள். எனவே, அவ்வகையில் அதன் ஏற்றம் மட்டிட முடியாததாகும்.
இவ்வேதம் அரபி மொழியில் அருளப்பட்டது. இருப்பினும் இது அரபியர்களுக்கு மட்டுமல்லாது, அகிலத்தார் அனைவருக்குமான வழிகாட்டியாகும். ஏனைய வேதங்களைப் போன்று குறிப்பிட்ட காலம், இடம், இனம், மொழி என சுருங்கிய வட்டத்தைக் கொண்ட தல்ல. அவை ஆது கூட்டத்தாருக்கு, இஸ்ரவேலர்களுக்கு, ஈஸாவின் சமூகத்தாருக்கு என குறிப்பிட்ட இனங்களுக்கு அருளப்பட்டன. ஆனால், அல்குர்ஆன் முஹம்மது நபியின் சமூகத்துக்கு மட்டும் அருளப்பட்ட வேதமில்லை. ஒட்டுமொத்த மனித சமூகத்துக்கும் அருளப்பட்டதாகும். அதேவேளை, இறைத்தூதரின் வாழ்க்கைக் காலத்துடன் முடிவு பெறுவதும் அல்ல. பிரபஞ்சம் தழுவியதாக உலக அழிவுவரை தொடரக்கூடிய அனைவருக்குமான வேதமாகும்.
எனவேதான் இறைவன், ‘இது அகிலத்தார் அனைவருக்கும் நல்லுபதேசமேயன்றி வேறில்லை’ எனக் கூறுகிறான். ரமலான் என்றவுடன் நினைவுக்கு வருவது அல்குர்ஆன்தான். அதனைக் கொண்டே ரமலான் தன்னை அலங்கரித்துக் கொள்கிறது.
எந்த வணக்கமும் அந்தந்த காலத்தின் தேவையை, அவசியத்தைக் கருதி செய்யப்பட வேண்டும். அந்த அடிப்படையில் பார்த்தால், ரமலான் மாதத்தின் அமல்கள் முழுக்க குர்ஆனை மையமாகக் கொண்டதாகும்.
தொழுகை, நோன்பு உள்ளிட்ட ஏனைய வணக்கங்களைப் பார்த்தாலோ, கேட்டாலோ நன்மை கிடைக்காது. ஆனால், அல்குர்ஆன் ஓதினாலும், பிறர் ஓதுவதை செவிமடுத்தாலும் நன்மை கிடைக்கும். எனவேதான், வணக்கங்களில் சிறந்தது குர்ஆன் ஓதுவது என்றும், அது சலிப்பை ஏற்படுத்தாது என்றும் நபி அவர்கள் கூறினார்கள்.
பொதுவாக, எந்த ஒரு புத்தகத்தையும் ஒரு முறை, இரு முறை படிக்கலாம். அதற்கு மேல் சலிப்பு ஏற்பட்டுவிடும். ஆனால் எத்தனை முறை ஓதினாலும், கேட்டாலும் சலிக்காதது திருமறை குர்ஆன் ஆகும். இஸ்லாமியர்கள் ஒவ்வொரு நாளும் தொழுகையிலும், பிற நேரங்களிலும் பலமுறை கேட்டாலும் சலிப்பு ஏற்படுவதில்லை.
அகிலத்தார் அனைவரும் படித்துப் பயன்பெறும் வகையில் அல்குர்ஆனை இலகுவாக ஆக்கியிருப்பதாக இறைவன் குறிப்பிடுகிறான். பொதுவாக, ஒரு மொழியில் உள்ள நூலை அந்நியர்கள் மனனமிடுவதோ அல்லது எழுதுவதோ அசாதாரணமானது. ஆனால் திருமறையின் விஷயத்தில் மட்டும் இது மாறுபடுகிறது. குர்ஆனை அரபிகள் மனனம் செய்திருப்பதைவிட அதிக எண்ணிக்கையில் அரபு மொழி பேசாத லட்சக்கணக்கான நபர்கள் மனனமிட்டுள்ளார்கள் என்பது ஆச்சரியமான செய்தியாகும்.
1,500 வருடங்களுக்கு முன்னர் மனித கற்பனையில் உதித்திருக்க முடியாத அறிவியல் உண்மைகளையும், தொல்பொருள் ஆய்வுகள் இன்று உறுதிப்படுத்தும் எத்னையோ வரலாற்றுச் சான்றுகளையும் அல்குர்ஆன் தன்னகத்தே கொண்டுள்ளது.
இத்திருமறையின் மூலமாக இப்புனித மாதத்தில் அகில மாந்தர்கள் அனைவர் மீதும் இறைவன் அருள்புரிவானாக!
-முனைவர் அலி இப்ராஹிம் ஜமாலி, பேராசிரியர், ஜமால் முஹம்மது கல்லூரி, திருச்சி