

திருநாகேஸ்வரம் கோயிலில் ராகு பெயர்ச்சியை முன்னிட்டு நேற்று சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த நாகவல்லி, நாகக்கன்னி உடனாய ராகு பகவான். (அடுத்த படம்) மயிலாடுதுறை மாவட்டம் கீழப்பெரும்பள்ளம் நாகநாதசுவாமி கோயிலில் கேது பெயர்ச்சியையொட்டி நேற்று சிறப்பலங்காரத்தில் எழுந்தருளிய கேது பகவானுக்கு காட்டப்பட்ட மகா தீபாராதனை.படம்: சி.எஸ்.ஆறுமுகம்
கும்பகோணம்/மயிலாடுதுறை: திருநாகேஸ்வரம், கீழப்பெரும்பள்ளம் கோயில்களில் ராகு- கேது பெயர்ச்சி விழா நேற்று விமரிசையாக நடைபெற்றது.
ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ராகு, கேது பெயர்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி, நேற்று மாலை 5.14 மணிக்கு ராகு பகவான் கும்ப ராசியில் இருந்து மகர ராசிக்கும், கேது பகவான் சிம்ம ராசியில் இருந்து கடக ராசிக்கும் பெயர்ச்சி அடைந்தனர்.
இதையொட்டி, தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயிலில் தனி சந்நிதியில் அருள்பாலிக்கும் ராகு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து, தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
மாலை 6 மணிக்கு ராகு பகவான் வெள்ளி சேஷ வாகனத்தில் வீதியுலா புறப்பட்டார். ராகு பெயர்ச்சியை முன்னிட்டு மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மகரம், கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நவ.16-ம் தேதி சந்தனக் காப்பு அலங்காரம், லட்சார்ச்சனை பூர்த்தி மற்றும் மகா தீபாராதனை நடைபெற உள்ளது.
இதேபோல, மயிலாடுதுறை மாவட்டம் கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் உள்ள சவுந்தரநாயகி சமேத நாகநாதசுவாமி கோயில் நவக்கிரகத் தலங்களில் கேது பரிகாரத் தலமாக விளங்குகிறது. இங்கு தனிச் சந்நிதியில் அருள்பாலிக்கும் கேது பகவானுக்கு பெயர்ச்சியை முன்னிட்டு, மாலை 5.14 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.