

வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் புரட்டாசி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி வழிபாட்டுக்காக செப்டம்பர் 27-ம் தேதி வரை சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் பெய்த சாரல் மழை காரணமாக ஓடைகளில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் புரட்டாசி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி வழிபாட்டுக்காக செப்டம்பர் 23 முதல் 27-ம் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இன்று குரு வார பிரதோஷத்தை முன்னிட்டு வத்திராயிருப்பு தாணிப்பாறை வனத்துறை நுழைவு வாயில் வழியாக காலை 6 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். 800-க்கும் அதிகமான பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.
சதுரகிரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் மற்றும் நந்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு விசேஷ பூஜைகள் நடைபெற்றது.
கடந்த மூன்று மாதங்களாக மலைப்பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் சதுரகிரி மலைப்பதையில் உள்ள ஓடைகளில் நீர்வரத்து இல்லாமல் முற்றிலும் வறண்டதால் மலையேறும் பக்தர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வந்தனர்.
இந்நிலையில், கடந்த வாரம் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த சாரல் மழை காரணமாக ஓடைகளில் நீர்வரத்து உள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.