வடபழநி முருகன் கோயிலில் பாரபட்சமற்ற தரிசனம் கோரி பொது நல வழக்கு

வடபழநி முருகன் கோயில் | கோப்புப்படம்

வடபழநி முருகன் கோயில் | கோப்புப்படம்

Updated on: 
1 min read

சென்னை: வடபழநி முருகன் கோயிலில், பாரபட்சமற்ற, தடையற்ற தரிசன ஏற்பாடுகளை உறுதிசெய்ய உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை வடபழநியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற வடபழனி ஆண்டவர் கோயிலில், முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள், கர்ப்பிணிப் பெண்கள், பொதுமக்கள், கைக்குழந்தைகளுடன் வரும் பக்தர்கள் ஆகியோரை பாரபட்சமற்ற முறையில் நடத்தவும், தடையற்ற தரிசன ஏற்பாடுகளை உறுதி செய்யவும் உத்தரவிடக் கோரி அப்பகுதியைச் சேர்ந்த முருக பக்தரான என்.எஸ்.செந்தில்குமார் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அவரது மனுவில், “பழநி கோயிலில் இருந்த இந்து சமய அறநிலையத் துறை துணை ஆணையர் லட்சுமி வடபழநி கோயிலுக்கு மாற்றம் செய்யப்பட்டதிலிருந்து, வடபழநி கோயிலில் பக்தர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

50 ரூபாயாக இருந்த சிறப்பு தரிசனத்துக்கான கட்டணம் 100 ரூபாயாக மாற்றி வசூலிக்கப்படுகிறது. முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள், கர்ப்பிணிப் பெண்கள், பொதுமக்கள், கைக்குழந்தைகளுடன் வரும் பக்தர்கள் ஆகியோருக்கு ஒதுக்கப்பட்ட தனி வழி மாற்றப்பட்டுள்ளது.

விருப்பத்தின் அடிப்படையில் சிறப்பு தரிசனக் கட்டணம் வசூலிக்காமல், இவர்களிடம் கட்டாய வசூல் செய்யப்பட்டு சிறப்பு தரிசன வழியில் அனுப்பப்படுகின்றனர்; பக்தர்களை பணம் கொட்டும் இயந்திரமாக கோயில் நிர்வாகத்தினர் கருதுகின்றனர்.

அர்த்த மண்டபத்தில் அமர்ந்து முருகப்பெருமானை தரிசிக்கும் வாய்ப்பு மாற்றப்பட்டுள்ளது. 10 மீட்டர் தூரத்தில் முருகப்பெருமானை பக்தர்கள் தரிசித்து வந்த நிலையில், தற்போது 150 மீட்டர் தொலைவில் இருந்து பார்க்கும் வகையில் நடைமுறைகள் மாற்றப்பட்டுள்ளன என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை மனுவில் கூறியுள்ளார்.

இந்த வழக்கை இந்து சமய அறநிலைத்துறை தரப்பில் துணை ஆணையர் எஸ்.லட்சுமி பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், “மனுதாரர் கூறும் குற்றச்சாட்டுகள் தவறானது. கூட்ட நெரிசலை ஒழுங்குபடுத்தவே புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. 150 மீட்டர் தூரத்தில் இருந்து தான் முருகனை தரிசிக்க வேண்டும் என்று கூறுவது தவறு. 30 மீட்டர் தொலைவில் இருந்து தரிசிக்கும் வகையில் தான் புதிய வழி அமைக்கப்பட்டுள்ளது.

வார இறுதி நாட்கள், விடுமுறை நாட்கள், விசேஷ நாட்கள் ஆகியவற்றில் வழக்கமான கூட்டத்தை விட கூட்டம் அதிகமாக இருப்பதால் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. எவ்வித இடையூறும் இல்லாமல் மன நிம்மதியுடன் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம்,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வர உள்ளது

<div class="paragraphs"><p>வடபழநி முருகன் கோயில் | கோப்புப்படம்</p></div>
மேற்கு வங்கத்திலும் தவெக கிளை தொடக்கம்: சமூக பணிகள் மூலம் பொதுமக்களைக் கவர வியூகம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in