

திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனலில் (எஸ்விபிசி) ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் ஆண்டாள் அருளிய திருப்பாவை பாடல்கள் தினமும் ஒளிபரப்படுவது வழக்கம்.
இதனை தமிழ், தெலுங்கு,கன்னடம், ஹிந்தி ஆகிய 4 மொழிகளிலும் ஒளிபரப்பி வருகின்றனர். இதில் இம்முறை ‘மார்கழி வைபவம்’ எனும் பெயரில் ஒளிபரப்பாகி வருகிறது. முதலில் நாதஸ்வர இசையில் திருப்பாவை ரங்கோலியுடன் இணைந்து ஒளிபரப்பாகிறது. பின்னர் திருப்பாவைக்கான விளக்கத்துடன் அந்த நாளின் பாசுரம் ஒளிபரப்பாகிறது. இதனை தொடர்ந்து சென்னையைச் சேர்ந்த 16 வயது பிரணதியின் பரதநாட்டிய நடனத்துடன் மிகவும் ரம்மியமாக திருப்பாவை ஒளிபரப்பாகிறது.
தினமும் ஒரு பாசுரத்துக்கு பிரணதியின் நடனம் ஒரு முத்தாய்பாய் அமைந்துள்ளது. இதுகுறித்து எஸ்விபிசி சேனல் நிகழ்ச்சிகளின் தலைமை அதிகாரியான ஸ்ரீ ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறியதாவது: திருப்பாவையை எளிய மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் இம்முறை திட்டமிடப்பட்டுள்ளது. முதலில் கோலத்துடன் நாதஸ்வர இசை இடம்பெறும்.
இதனை தொடர்ந்து, திருப்பாவைக்கான விளக்கம் கொடுக்கப்படும். அதன் பிறகு பிரணதியின் பரத நாட்டியம் மூலம் திருப்பாவை பாசுரம் பிரசுரிக்கப்படும். நடனத்துடன் கூடிய இசையை பலர் விரும்பி பார்க்கின்றனர். இதற்கு பக்தர்களிடையே நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது. இம்முறை, சென்னையைச் சேர்ந்த சாஃப்ட்வேர் நிறுவனம் நடத்தி வரும் கோகுல கிருஷ்ணன் - கீதா தம்பதியினரின் மகளான பிரணதிதான் ஆண்டாள் இயற்றிய 30 பாசுரங்களுக்கும் பரதம் ஆடி கொடுத்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.