

பத்தனம்திட்டா: சபரிமலைக்கு வனப் பாதைகள் வழியாக வரும் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16-ம் தேதி நடை திறக்கப்பட்டது. மறுநாள் முதல் சிறப்பு பூஜை, வழிபாடு நடந்து வருகிறது. இந்நிலையில் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிப்பதாவது:
சபரிமலைக்கு நடப்பு யாத்திரை காலத்தில் பாரம்பரிய வனப் பாதைகள் வழியாக வரும் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இதுவரை மொத்தம் 1,02,338 பக்தர்கள் பல்வேறு வனப் பாதைகள் வழியாக சந்நிதானத்தை அடைந்துள்ளனர்.
இவர்களில், 37,059 பக்தர்கள் அழுதக்கடவு-பம்பை பாதையை பயன்படுத்தியுள்ளனர். இந்தப் பாதையில் தினமும் சராசரியாக 1,500 முதல் 2,500 பக்தர்கள் வந்துள்ளனர். மேலும் 64,776 பக்தர்கள் சத்திரம் பாதையை தேர்வு செய்துள்ளனர். இந்தப் பாதையில் தினமும் 4,000 முதல் 5,000 பக்தர்கள் வருகை தருகின்றனர். வரும் நாட்களில் வனப் பாதைகளைப் பயன்படுத்தும் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இந்த சீசனில் சபரியில் தரிசனம் செய்த பக்தர்கள் எண்ணிக்கை 24 லட்சத்தை கடந்துள்ளது. டிசம்பர் 13 வரை, பம்பை-சபரிமலை பாதை வழியாக மட்டும் 23,47,554 பக்தர்கள் வந்துள்ளனர். வனப் பாதைகள் வழியாக வந்தவர்களையும் சேர்த்தால் மொத்த வருகை 24 லட்சத்தை கடந்துள்ளது.
தற்போது தினமும் சராசரியாக சுமார் 80,000 பக்தர்கள் சபரிமலைக்கு வருகின்றனர். இந்த சீசனில் அதிகபட்சமாக டிசம்பர் 8-ம் தேதி 1,01,844 பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்தனர். இவ்வாறு தேவஸ்வம் போர்டு தெரிவித்துள்ளது.