

புதுடெல்லி: மத்தியப் பணிக்காக அதிகாரிகளைப் பரிந்துரைக்கும்போது, பெண்கள், எஸ்.சி., எஸ்.டி. வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்று மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் தலைமைச் செயலாளர்களுக்கும் மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில், கூறியிருப்பதாவது:
மத்திய பணிக்காக பதவி உயர்வு பெறுவதற்காக, குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்குள்ளாக மாநில அரசால் திரும்ப அழைக்கப்பட வாய்ப்பில்லாத அதிகாரிகளை மட்டுமே பரிந்துரைக்க வேண்டும்.
பரிந்துரைக்கப்படும் அதிகாரிகள், மத்தியப் பணியாளர் திட்டத்தின் கீழ் உள்ள பதவிகளிலும், மத்தியப் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பிற மத்திய அரசு அமைப்புகளில் உள்ள தலைமை ஊழல் கண்காணிப்பு அலுவலர் பதவிகளிலும் அயல் பணி அடிப்படையில் நியமிக்கப்படுவார்கள்.
அரசுத் துறைகளில் நடக்கும் ஊழலைக் கண்காணிக்க, தலைமை ஊழல் கண்காணிப்பு அலுவலர்கள் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் நீண்ட கரமாகச் செயல்படுகிறார்கள். மத்தியப் பணிக்காக அதிகாரிகளைப் பரிந்துரைக்கும்போது, பெண்கள், எஸ்.சி., எஸ்.டி. வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.