

ஶ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வார் அவதார விழாவான ஆனி சுவாதி உற்சவம் இன்று (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோயில் 12 ஆழ்வார்களில் ஸ்ரீ பெரியாழ்வார், ஸ்ரீ ஆண்டாள் ஆகிய இரு ஆழ்வார்கள் அவதரித்த சிறப்புக்குரியது. இங்கு மூலவர் வடபத்ர சயனர், பெரியாழ்வார், ஆண்டாள் ரெங்க மன்னார் ஆகியோர் தனித்தனி சந்நிதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
பெரியாழ்வார் அவதரித்த ஆனி மாத சுவாதி உற்சவம் ஆண்டுதோறும் திருவிழாவாக வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு பெரியாழ்வார் ஆனி சுவாதி உற்சவம் செவ்வாய்க்கிழமை காலை 7.40 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஸ்ரீ பெரியாழ்வார் சன்னதிக்கு முன்பாக உள்ள தங்கக் கொடிமரத்தில் கருடாழ்வார் உருவம் பொறித்த கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்து பிரகாஷ் பட்டர் கொடி ஏற்றி வைத்தார். தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது.
விழாவில் தினசரி காலை பெரியாழ்வார் மண்டபம் எழுந்தருளல், இரவு பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா நடைபெறும். ஜூன் 24- ம் தேதி பெரியாழ்வார் செப்புத் தேரோட்டம் நடைபெறுகிறது. ஜூன் 25-ம் தேதி தீர்த்தவாரி, மங்களாசாசனம் நடைபெறுகிறது. கோயில் செயல் அலுவலர் சர்க்கரை அம்மாள், ஆய்வாளர் முத்து மணிகண்டன் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.