

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. இதில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனிப் பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் இந்த ஆண்டுக்கான வருடாந்திர பங்குனிப் பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.
இத்திருவிழா ஏப்.1-ம் தேதி வரை நடைபெற உள்ளது. நேற்று காலை 5.45 மணிக்கு கபாலீஸ்வரர், கற்பகாம்பாள், விநாயகர், சிங்காரவேலர், சண்டிகேஸ்வரர் மண்டபத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது. அதைத் தொடர்ந்து, காலை 6.20 மணி முதல் 6.50 மணி வரை கொடியேற்றம் நடந்தது.
இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர், விமான சேவை நடந்தது. நேற்று இரவு அம்பாள், மயில் வடிவத்தில் சிவபூஜை காட்சியும், புன்னை, கற்பக, வேங்கை மர வாகனங்கள் புறப்பாடும் நடைபெற்றன.
இந்த நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். மேலும், நாளை அதிகாரநந்திக் காட்சி நடக்கிறது. அதைத் தொடர்ந்து, கந்தர்வன், கந்தர்வி, மூஷிகம், வெள்ளிவிடை வாகனங்கள் புறப்பாடும், திருஞான சம்பந்தர் திருமுலைப்பால் விழாவும் நடக்கிறது.
மார்ச் 27-ம் தேதி வெள்ளி ரிஷப வாகனக் காட்சியும், பங்குனிப் பெருவிழாவின் பிரதான நிகழ்வான திருத்தேரோட்டம் மார்ச் 29-ம் தேதி காலையும் நடைபெறவுள்ளன.
எட்டாம் நாள் விழாவாக மார்ச் 30-ம் தேதி அறுபத்து மூவர் வீதியுலா நடைபெறும். மார்ச் 31-ம் தேதி ஐந்திருமேனிகள் விழாவும், ஏப். 1-ம் தேதி தீர்த்தவாரியும் நடைபெற உள்ளன. தொடர்ந்து, இரவு 8 மணிக்கு திருக்கல்யாண உற்சவத்தோடு கொடி இறக்கப்பட்டு பங்குனி விழா நிறைவு பெறுகிறது.