

திண்டுக்கல்: மூன்றாம் படை வீடான பழநி திருஆவினன்குடி கோயில் கும்பாபிஷேகம் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (டிச.8) காலை ஆயிரக்கணக்கான பக்தர்களின் ‘அரோகரா’ கோஷம் முழங்க கோலாகலமாக நடைபெற்றது.
முருகன் கோபித்துக் கொண்டு வந்து நின்ற தலம் என்பதால், பழநி மலை அடிவாரத்தில் உள்ள திருஆவினன்குடி கோயிலே மூன்றாம் படை வீடாகும். குழந்தை முருகனை மகாலட்சுமி (திரு),கோமாதா (ஆ), சூரியன் (இனன்), பூமாதேவி (கு),அக்னி (டி) ஆகியோர் வழிபட்டதால் ‘திருஆவினன்குடி’ என்று பெயர் பெற்றது. இங்கு முருகன் குழந்தை வடிவில் மயில் மீது ஆமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
முருகன் குழந்தை வடிவில் இருப்பதால் இவருடன் வள்ளி, தெய்வானை இல்லை. பழநி வரும் பக்தர்கள் முதலில் ‘திருஆவினன்குடி’ என்றழைக்கப்படும் குழந்தை வேலாயுத சுவாமி கோயிலில் வழிபட்ட பிறகே, மலைக்கோயிலுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த கோயிலில் கடந்த 2014 செப்.7-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்நிலையில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து, பல கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் நடைபெற்றன.கடந்த டிச.4-ம் தேதி கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பூர்வாங்கப் பூஜைகள் தொடங்கின.
இதையொட்டி, இரண்டு யாகசாலைகளில், 9 வேள்வி குண்டங்கள் அமைக்கப்பட்டன. 50-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
கங்கை, யமுனை, காவிரி, கிருஷ்ணா உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புண்ணிய தீர்த்தம், 100-க்கும் மேற்பட்ட கலசங்களில் நிரப்பி வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.
இன்று (டிச.8) அதிகாலை 4 மணிக்கு 6-ம் கால யாகசாலை பூஜை தொடங்கியது. தொடர்ந்து, யாக சாலையில் இருந்து புனிதநீர் கலசங்களை ஊர்வலமாக எடுத்துச் சென்று, கோயிலைச் சுற்றி வந்தனர். அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, அர.சக்கரபாணி, பழநி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் கொடியசைக்க, காலை 6.30 மணிக்கு ராஜகோபுரம், மூலவர் கோபுரம் மற்றும் அனைத்து சந்நிதி கோபுரங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது தமிழ், சம்ஸ்கிருதத்தில் மந்திரங்கள் ஓதப்பட்டன. தொடர்ந்து, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
நீர் தெளிப்பான் (ஸ்பிரிங்லர்) மூலம் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. அங்கு குழுமியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா’ என்று முழக்கமிட்டனர். இந்நிகழ்வில், திண்டுக்கல் ஆட்சியர் சரவணன், எஸ்பி பிரதீப், பழநி கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் லட்சமி, வேடசந்தூர் எம்எல்ஏ காந்திராஜன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, சந்நிதி மற்றும் கோயில் வளாகம் முழுவதும் பல வண்ண மலர்கள், பல வகையான பழங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
சிறப்பு நுழைவு பேட்ஜ் (பாஸ்) வழங்கப்பட்ட முக்கியப் பிரமுகர்கள், நன்கொடையாளர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் மட்டுமே கோபுர விமானங்கள் மீது அனுமதிக்கபட்டனர். கோயிலுக்கு உள்ளே வர முடியாத பக்தர்கள், ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த ‘எல்இடி’ திரையில் கும்பாபிஷேகத்தைப் பார்த்து தரிசித்தனர்.
கோயிலை சுற்றிலும் உள்ள வீடுகளின் மாடிகளிலும், தெருக்களிலும் நின்றபடி பக்தர்கள் கும்பாபிஷேகத்தை கண்டுகளித்தனர். பக்தர்களுக்காக கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் தொலைக்காட்சி, யூ-டியூப் சேனல்கள் மூலம் நேரலையில் ஒளிபரப்பப்பட்டன.
கும்பாபிஷேகத்துக்கு வந்திருந்த பக்தர்களுக்கு விபூதி, குங்குமம், முருகன் படம், பஞ்சாமிர்தம், புனித தீர்த்தம் அடங்கிய பிரசாதப் பை வழங்கப்பட்டது. மேலும், காலை 7 மணி முதல் மூன்று இடங்களில் உபயதாரர்கள் மூலம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
500-க்கும் மேற்பட்டபோலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் (டிச.7) இரவு முதல் பழநி குளத்து சாலை, திருஆவினன்குடி கோயில் சாலை, அய்யம்புள்ளி சாலைகள் தடுப்புகள் அமைத்து போக்குவரத்துக்கு தடை விதித்ததால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
பாதசாரிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இதனால் பாலசமுத்திரம், மதனபுரம், அய்யம்புள்ளி பகுதிக்கு செல்வோர் 3 கி.மீ்., தூரம் சுற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டது. கும்பாபிஷேகத்திற்கு
உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், விடுமுறை அளிக்காததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.