பழநி தைப்பூசத் திருவிழாவில் ‘திருஊடல்’ வைபவம்: இன்று இரவு தெப்ப உற்சவம்

பழநி தைப்பூசத் திருவிழாவில் ‘திருஊடல்’ வைபவம்: இன்று இரவு தெப்ப உற்சவம்
Updated on
1 min read

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி தைப்பூசத் திருவிழா நிறைவாக இன்று புதன்கிழமை (பிப்.4) காலை திருஊடல் வைபவம் நடைபெற்றது. இன்று இரவு தெப்பத்தேர் உற்சவம் மற்றும் கொடியிறக்குதல் நடைபெற உள்ளது.

பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா ஜன.26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தினமும் வெள்ளி ஆட்டுக்கிடா, காமதேனு, தந்தப் பல்லக்கு, தங்க மயில் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஜன.31-ல் திருக்கல்யாணம், பிப்.1-ம் தேதி தைப்பூசத்தன்று தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

விழாவின் 10-ம் நாளான இன்று புதன்கிழமை (பிப்.4) காலை 10 மணிக்கு வள்ளி சமேத முத்துக்குமாரசுவாமி புதுச்சேரி சப்பரத்திலும், தெய்வானை பல்லக்கு சப்பரத்திலும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

திருஊடல் வைபவம்: வள்ளியை திருமணம் செய்துக் கொண்ட முத்துக்குமார சுவாமி, தெய்வானையை சமாதானப்படுத்தும் ‘திருஊடல்’ வைபவம் நடைபெற்றது. அப்போது, முத்துக்குமார சுவாமி வள்ளியை திருமணம் செய்ததை அறிந்து கோபம் அடைந்து கோயில் நடையை சாத்திக் கொண்டார்.

சுவாமி வள்ளியுடன் கோயிலுக்கு வெளியே நின்றுக் கொண்டு, வீரபாகுவை தெய்வானையிடம் சமாதானப் பேச்சு வார்த்தைக்கு அனுப்பி சமாதானப்படுத்தினார். அதற்கான தூதுப் பாடல்களை திருஊடல் ஓதுவார் சிவநாகராஜன் பாடினார். சமாதானமடைந்த தெய்வானை கோயில் நடையை திறந்து சுவாமிக்கு வழிவிட கோயிலுக்குள் நுழைந்த முத்துக்குமார சுவாமி வள்ளி, தெய்வானை சமேதராக பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

திருவிழாவின் நிறைவாக இரவு 8 மணிக்கு மேல் கோயிலை ஒட்டியுள்ள தெப்பத்தில் தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது. இதில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வள்ளி, தெய்வானையுடன் முத்துக்குமாரசுவாமி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். தொடர்ந்து, இரவு 11 மணிக்கு கொடி இறக்குதலுடன் திருவிழா நிறைவு பெறவுள்ளது.

பழநி தைப்பூசத் திருவிழாவில் ‘திருஊடல்’ வைபவம்: இன்று இரவு தெப்ப உற்சவம்
“ராகுல் கேள்விகளுக்கு பாஜக அஞ்சுவது ஏன்?” - முதல்வர் ஸ்டாலின்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in