பழநியில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்: பிப்.1 தேரோட்டம்

பழநி தைப்பூசத் திருவிழா

பழநி தைப்பூசத் திருவிழா

படங்கள்: நா.தங்கரத்தினம்

Updated on
1 min read

திண்டுக்கல் மாவட்டம் பழநியில் தைப்பூசத் திருவிழா பெரியநாயகியம்மன் கோயிலில் இன்று (ஜன.26) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக பிப்.1-ம் தேதி மாலை தேரோட்டம் நடைபெற உள்ளது.

பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா திங்கட்கிழமை (ஜன.26) காலை 10 மணிக்கு மேல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக, சுவாமி, கொடிமரம் மற்றும் கொடி ஆகியவற்றுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, வேல், மயில், சேவல் இடம் பெற்ற கொடியேற்றப்பட்டது. கொடி மண்டபத்தில் வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி எழுந்தருளினார்.

கோயில் இணை ஆணையர் மாரிமுத்து,   அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பிரமணியன், அறங்காவலர்கள் சுப்பிரமணியம், தனசேகர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் சுவாமி ரத வீதிகளில் தங்க மயில், வெள்ளி மயில், ஆட்டுக்கிடா, காமதேனு உள்ளிட்ட வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்ளுக்கு காட்சியளிப்பார்.

விழாவின் 6-ம் நாளான ஜன.31-ம்தேதி இரவு 7 மணிக்கு மேல் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. அன்று இரவு 9 மணிக்கு மேல் சுவாமி மணக்கோலத்தில் வெள்ளித்தேரில் உலா வருவார்.

விழாவின் முக்கிய நிகழ்வாக பிப்.1-ம் தேதி தைப்பூசத்தன்று காலை 5 மணிக்கு மேல் சண்முகநதிக்கு எழுந்தருளல், காலை 11 மணிக்கு மேல் தேரேற்றம், மாலை 4 மணிக்கு மேல் தேரோட்டம் நடைபெற உள்ளது. நான்கு ரத வீதிகளில் வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். பிப்.4-ம் தேதி காலை 9 மணிக்கு திருவூடல் நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு மேல் தெப்பத்தேர் விழா நடைபெறும். அன்று இரவு 11 மணிக்கு மேல் கொடிஇறக்கத்துடன் விழா நிறைவு பெறும்.

2 லட்சம் பேருக்கு அன்னதானம்: தைப்பூசத் திருவிழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.  அவ்வாறு வரும் பக்தர்களுக்கு தேஸ்வதானம் சார்பில் இன்று (ஜன.26) முதல் 10 நாட்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று காலை 8 மணி முதல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது . ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் அருகே உள்ள காவடி மண்டபத்தில்  தினமும் 14,000 பேருக்கும், பழநி அருகேயுள்ள கொங்கூர் பக்தர்கள் ஓய்வு கூடத்தில் தினமும் 6,000 பேருக்கும் என மொத்தம் 20,000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க தேவஸ்தானம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தினமும் 10,000 பக்தர்கள் வீதம் 10 நாட்களும் சேர்த்து மொத்தம் 2 லட்சம் பக்தர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in