

தஞ்சாவூர் விளார் சாலையில் உள்ள வீரமாகாளியம்மன் கோயிலில் கிடாவெட்டி பொதுமக்களுக்கு கறி விருந்து அளித்த முஸ்லிம் தம்பதியர்.
தஞ்சாவூர்: பிரார்த்தனை நிறைவேறியதால் முஸ்லிம் தம்பதியர் வீரமாகாளியம்மன் கோயிலில் கிடா வெட்டி, பூஜை செய்து 200-க்கும் மேற் பட்டவர்களுக்கு கறி விருந்து பரிமாறி தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.
தஞ்சாவூர் விளார் சாலை, நாவலர் நகரில் மளிகை கடை நடத்தி வருபவர் ஜாகிர் உசேன்(52). இவரது மனைவி தன் சிலா(48). இவர்களது மகன் பி.இ.பட்டதாரியான பாரீஸ்கானுக்கு(27) சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார்.
இவரது நிலைமையை அறிந்த நாவலர் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள், ஜாகிர் உசேனுக்கு ஆறுதல் கூறியதுடன், அந்த பகுதியில் பிரசித்தி பெற்று விளங்கும் வீரமாகாளியம்மன் கோயிலில், ஜாகிர் உசேனை பிரார்த்தனை செய்து கொள்ளுமாறு கூறினர். இதேபோல, ஜாகிர் உசேன் குடும்பத்தினரும் வீரமாகாளியம்மன் கோயிலுக்கு சென்று வேண்டிக்கொண்டனர்.
அதன்பிறகு, ஜாகிர் உசேனின் மகன் பூரண குணமடைந்து வீடு திரும்பியதால், வேண்டுதலை நிறைவேற்ற முடிவு செய்து, நேற்று முன்தினம் வீரமாகாளியம்மன் கோயிலில் ஜாகிர் உசேன் குடும்பத்தினர் பொங்கல் வைத்து, படையலிட்டு, பின்னர் கிடா வெட்டி அந்த பகுதியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு கறி விருந்து பரிமாறி நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
தங்களது மகன் குணம் அடைந்தமைக்கு, இந்த பகுதி மக்களின் வேண்டுதல்தான் காரணம் எனக் கூறி நன்றியை தெரிவித்து கொண்டனர் ஜாகிர் உசேன் தம்பதியர்.