

படம்- ர.செல்வமுத்துகுமார்
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா தொடக்க நிகழ்வான திருக்கொட்டகை முகூர்த்தக்கால் ஊன்றும் வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி பெருவிழா உலக பிரசித்தி பெற்றது.
நடப்பாண்டு வைகுண்ட ஏகாதசி பெருவிழா வரும் டிச.9-ம் தேதி திருந்நெடுந்தாண்டகம் என்ற ஐதீக உற்சவத்துடன் துவங்குகிறது. மறுநாள் (டிச.10) பகல்பத்து எனப்படும் திருமொழி திருநாள் துவங்குகிறது.
தொடர்ந்து 10 நாட்கள் மூலஸ்தானத்தில் புறப்பாடு கண்டருளும் நம்பெருமாள் அர்ஜூன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதைத்தொடர்ந்து டிச.20-ம் தேதி ராப்பத்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் 10 நாட்களும் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடு கண்டருளும் நம்பெருமாள் திருமாமணிமண்டபம் எனப்படும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளினார்.
மொத்தம் 20 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இந்நாட்களில் நம்பெருமாள் முன்பு நாலாயிர திவ்ய பிரபந்த தீந்தமிழ் பாடல்களை அரையர்கள் அபிநயத்துடன் இசைத்து காட்டுவார்கள்.
விழாவின் முக்கிய நிகழ்வுகளான மோகினி அலங்காரம் வரும் டிச.19-ம் தேதியும், சொர்க்கவாசல் திறப்பு எனப்படும் பரமபதவாசல் திறப்பு டிச.20-ம் தேதியும், திருக்கைத்தல சேவை டிச.26-ம் தேதியும், திருமங்கை மன்னன் வேடுபறி டிச.27-ம் தேதியும், தீர்த்தவாரி டிச.29-ம் தேதியும், நம்மாழ்வார் மோட்சம் டிச.30-ம் தேதியும் நடைபெறுகின்றன.
தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்கள், நாடுகளை சேர்ந்த பல லட்சம் பேர் வருகை தரக்கூடிய வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் தொடக்க நிகழ்வாக, திருக்கொட்டகை முகூர்த்தக்கால் ஊன்றும் வைபவம் இன்று காலை நடைபெற்றது.
ஆயிரங்கால் மண்டபம் முன்பு முகூர்த்தக்காலுக்கு சிறப்பு பூஜைகள், புண்ணியாவாகனம் மற்றும் மஹா தீபராதனை நடைபெற்றது. கோயில் அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள், மங்கள இசை முழங்க முகூர்த்தக்கால் ஊன்றப்பட்டது.
அப்போது, கோயில் யானைகள் ஆண்டாள், லட்சுமி ஆகியவை துதிக்கைகளை தூக்கி ஆசிர்வாதம் செய்யும் வகையில் பிளிறியது பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது. விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.