மழையால் நீர்நிலைகள் நிரம்பட்டும்..! | மார்கழி மகா உற்சவம்

மழையால் நீர்நிலைகள் நிரம்பட்டும்..! | மார்கழி மகா உற்சவம்
Updated on
1 min read

ஆழி மழைக் கண்ணா! ஒன்று நீ கைகரவேல் |

ஆழியுள் புக்கு முகந்துகொ டார்த்தேறி ||

ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துப் |

பாழியந் தோளுடைப் பத்மநாபன் கையில் ||

ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்றதிர்ந்து |

தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல் ||

வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும் |

மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய் ||

(திருப்பாவை 4)

வருண பகவான், கடல் போன்ற கருணை உள்ளம் படைத்தவர். கடலுக்குள் சென்று நீரை முகந்து கொண்டு ஆரவாரத்துடன் ஆகாயத்தில் ஏறி மழையை வரவழைப்பார். பரந்தாமனின் கையில் இருக்கும் சக்கரம் போல் மின்னலை ஒளிரச் செய்வார். வலம்புரி சங்கு போல் அதிர வைக்கும் சத்தத்துடன் உரக்கக் குரல் கொடுப்பார்.

சாரங்கன் விடும் தொடர் அம்புகள் போல் நிற்காமல் மழையை பொழியச் செய்வார். உலகில் நல்லவர்கள் வாழ அவரது மழை உதவட்டும். மார்கழியில் மனம் மகிழ்ந்து நீராட எங்களுக்கு அந்த மழை உதவும். அனைத்தும் உன் அருளால்தான் நடைபெறும் என்று கண்ணனை வேண்டுகிறாள் ஆண்டாள்.

வேதப்பொருளான இறைவனை வணங்குவோம்!

ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ |

வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ ||

எண்ணிக் கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும் |

கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே ||

விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளை |

கண்ணுக்கினியானை பாடிக் கசிந்துள்ளம் ||

உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயே வந்து |

எண்ணிக் குறையில் துயலேலோர் எம்பாவாய் ||

(திருவெம்பாவை 4)

முத்துக்கள் ஒளி சிந்தும். அவை போன்ற பற்களுடன் சிரிப்பவளே! இன்னும் உனக்கு பொழுது விடியவில்லையா? என்று தோழிகள் கேட்டதும், உறங்கிக் கொண்டிருந்த பெண், “பச்சைக் கிளி போல் பேசும் தோழிகள் வந்துவிட்டனரா?” என்று கேட்கிறாள். தோழிகள் அனைவரும் ஒரே குரலில், “உன்னை எழுப்புவதற்காக ஓடோடி வந்துவிட்டோம்.

தேவர்களின் மருந்தாகவும், வேதங்களின் பொருளாகவும் இருக்கும் சிவபெருமானைப் பாடி உள்ளம் உருகும் வேளையில் அவர்களை எண்ணிக் கொண்டிருக்க முடியுமா? எவ்வளவு பேர் வந்துள்ளோம் என்று நீயே பார்த்துக் கொள். நீ எதிர்பார்த்த எண்ணிக்கை இல்லையென்றால், மீண்டும் போய் உறங்குவாயாக.!” என்று தோழிகள் அவளை கேலி செய்தனர்.

மழையால் நீர்நிலைகள் நிரம்பட்டும்..! | மார்கழி மகா உற்சவம்
பரந்தாமன் திருவடிகளில் சரண் புகுவோம்! | மார்கழி மகா உற்சவம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in