பரந்தாமன் திருவடிகளில் சரண் புகுவோம்! | மார்கழி மகா உற்சவம் 03

பரந்தாமன் திருவடிகளில் சரண் புகுவோம்! | மார்கழி மகா உற்சவம் 03
Updated on
1 min read

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி |

நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால் ||

தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும் மாரி பெய்து |

ஓங்கு பெருஞ்செந்நெல் லூடு கயலுகளப் ||

பூங்குவளைப் போதில் பொறவண்டு கண்படுப்பத் |

தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி ||

வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள் |

நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய் ||

(திருப்பாவை 3)

ஸ்ரீமன் நாராயணன், வாமன அவதாரம் எடுத்து தனது ஓரடியால் உலகத்தை அளந்தான். அவன் பெயரைச் சொல்லி அவன் புகழ் பாடுவோம். அவன் பெருமைகளை கூறியபடி பாவை நோன்புக்காக நாம் அதிகாலை நீராடினால், இந்த நாடு முழுவதும் மாதம் மும்மாரி பெய்யும்.

அதனால் அனைத்துக் செழிக்கும், செந்நெல் வயல்களில் பயிர்கள் வளரும். அதற்கு இடையே கயன்மீன்கள் துள்ளிக் குதிக்கும். நீர்நிலைகளில் குவளை மலர்கள் பூத்துக் குலுங்கும். அவற்றின் மீது வண்டினங்கள் வந்து அமர்ந்து தேன் பருகும். பசுக்கள் பாலால் குடங்களை நிறைத்துவிடும். அழிவற்ற செல்வம் எங்கும் நிறையும் என்று தனது தோழிகளை நீராட அழைக்கிறாள் ஆண்டாள்.

இறைவனை தரிசிக்க தூய பக்தி அவசியம்!

முத்தன்ன வெண்நகையாய் முன்வந்து எதிர் எழுந்தென் |

அத்தன் ஆனந்தன் அமுதனென்ற உள்ளுறித் ||

தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடை திறவாய் |

பத்துடையீர் ஈசன் பழஅடியீர் பாங்குடையீர் ||

புத்தடியோம் புன்மை தீர்த்தாட் கொண்டாற் பொல்லாதே |

எத்தோ நின் அன்புடமை எல்லோம் அறியோமே ||

சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை |

இத்தனையும் வேண்டும் நமக்கேலோர் எம்பாவாய் ||

(திருவெம்பாவை 3)

முத்துப் பற்கள் தெரியும்படியாக சிரித்து எங்களை கவரும் தோழியே! ஒருகாலத்தில் நீ எங்களுக்கு முன்பே எழுந்து தயாராக இருப்பாய். சிவபெருமானின் புகழைப் பாடிக் கொண்டிருப்பாய். அவனே என் தலைவன், அவன் இன்பவடிவினன், அவன் இனிமையானவன் என்று கூறுவாய். ஆனால் இப்போது உறக்கத்தில் மூழ்கி இருக்கிறாயே என்று தோழிகள் உறங்கும் தோழியை சாடுகின்றனர்.

உடனே எழுந்த தோழி, தனக்கு விரதம் இருந்து பழக்கம் இல்லையென்றும், தான் பக்திக்கு புதிது என்று கூறுகிறாள். அதற்கு அவர்கள், “உன் தூய்மையான பக்தி குறித்து எங்களுக்குத் தெரியும். நீ சீக்கிரம் எழ வேண்டும் என்பதாலேயே அவசரப்படுத்துகிறோம்” என்று பதிலளித்தனர்.

பரந்தாமன் திருவடிகளில் சரண் புகுவோம்! | மார்கழி மகா உற்சவம் 03
அனைவருக்கும் உதவி செய்வோம்! | மார்கழி மகா உற்சவம் 02

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in