அனைவருக்கும் உதவி செய்வோம்! | மார்கழி மகா உற்சவம் 02

அனைவருக்கும் உதவி செய்வோம்! | மார்கழி மகா உற்சவம் 02
Updated on
1 min read

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச் |

செய்யும் கிரிசைகள் கேளீரோ; பாற்கடலுள் ||

பையத் துயின்ற பரமனடி பாடி |

நெய்யுண்ணோம் பாலுண்ணோம்; நாட்காலே நீராடி ||

மையிட்டெழுதோம்; மலரிட்டு நாம் முடியோம் |

செய்யாதன செய்யோம்; தீக்குறளை சென்றோதோம் ||

ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி |

உய்யுமாறு எண்ணி உகந்தேலோ ரெம்பாவாய் ||

(திருப்பாவை 2)

முழுநிலவு போன்ற முகத்தைக் கொண்ட கண்ணன்,, மாதங்களில் தான் மார்கழி என்கிறான். இந்த பூவுலகில் வாழும் அனைவரும் பாவை நோன்புக்காக சிலவற்றை செய்ய வேண்டும். சிலவற்றை செய்யக் கூடாது என்று சபதம் ஏற்க வேண்டும். திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள ஸ்ரீமன் நாராயணனின் பாதங்களைப் போற்றி பாடுவோம்.

நெய், பால் கலந்த உணவு கூடாது. அதிகாலையில் உறக்கத்தை தவிர்த்து எழுந்து நீராடுவோம், எவ்வித அலங்காரமும் வேண்டாம். நம்மைத் தேடி வருபவர்களுக்கு இல்லை என்று சொல்லாது உணவிட வேண்டும். இதுவே நாம் உய்வதற்கான வழி என்று நினைத்து பாவை நோன்பை நோற்க ஆண்டாள் தனது தோழியரை அழைக்கிறாள்.

நடன சபேசனை போற்றுவோம்!

பாசம் பரஞ்சோதிக்கென்பாய் இராப்பகல் நாம் |

பேசும் போதெப்போது இப்போதார் அமளிக்கே ||

நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர் |

சீசி இவையுஞ் சிலவோ விளையாடி ||

ஏசும் இடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக் |

கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும் ||

தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள் |

ஈசனார்க்கு அன்பர் யாம் ஆரேலோர் எம்பாவாய் ||

(திருவெம்பாவை 2)

சிறந்த அணிகலன்களை அணிந்து கொண்டிருக்கும் தோழியே! நாம் பேசும் சமயத்தில், “என் அன்பு, ஒளிப்பிழம்பாக விளங்கும் இறைவனுக்கு’ என்று கூறுவாய். ஆனால் உன் அன்பு முழுவதும் உறக்கத்தின்மீது தான் இருக்கிறது என்று தோழிகள் கூறியதும், உறக்கத்தில் இருந்த தோழி எழுந்து, ‘ஏதோ அறியாமல் தூங்கிவிட்டேன்.

அதற்காக இப்படியா?’ என்று கேட்கிறாள். தேவர்களும், முனிவர்களும் பல காலம் தவமிருந்து இறைவனை தரிசித்தனர். ஆனால் தில்லை அம்பலத்தில் நடனம் புரிபவன், நம்மைத் தேடி வரும்போது, நாம் அவன் மீது எவ்வளவு அன்பு வைக்க வேண்டும் என்று தோழிகள் கேட்கின்றனர்.

அனைவருக்கும் உதவி செய்வோம்! | மார்கழி மகா உற்சவம் 02
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 17 டிசம்பர் 2025

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in