

வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனைத் |
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி ||
அங்கு அப்பறைகொண்ட ஆற்றை அணி புதுவைப் |
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன ||
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே |
இங்கு இப்பரிசுரைப்பார், ஈரிரண்டு மால்வரைத்தோள் ||
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் |
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவ ரெம்பாவாய்! ||
(திருப்பாவை 30)
அலைகள் நிறைந்து காணப்படும் பாற்கடலைக் கடைந்த மாதவன் மகாவிஷ்ணு. கேசி என்ற அரக்கனைக் கொன்றவன். ஆயிரம் நாமங்களால் போற்றப்படுபவன். சந்திரனைப் போன்ற அழகு முகம் கொண்ட ஆயர்குலப் பெண்கள், மிகுந்த சிரத்தையுடன் பாவை நோன்பு இருந்து, மேக நிறத்தவனை தரிசித்து பலன் பெற்ற விவரத்தை விளக்கி, ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வாரின் மகளாக அவதரித்த சூடிக் கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாள், 30 பாடல்கள் பாடி ஸ்ரீமன் நாராயணனுக்கு பாமாலை தொடுத்துள்ளாள்.
இப்பாசுரங்களைப் படிப்பவர்கள் எங்குச் சென்றாலும், அனைத்து வித சிறப்புகளுடன் இப்பிறவியில் மட்டுமல்லாது, எப்பிறவியிலும், கண்ணனின் அருளுடன், இன்பமுடன் வாழ்வர் என்று இனிதே நிறைவடைகிறது திருப்பாவை.
ஈசனை வணங்கினால் குறையேதும் இல்லை…!
புவனியில் போய் பிறவாமையில் நாள் நாம் |
போக்குகின்றோம் அவமே இந்தப் பூமி ||
சிவன் உய்யக் கொள்கின்றவாறென்று நோக்கி |
திருப் பெருந்துறையுறை வாய் திருமாலாம் ||
அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப்படவும் |
நின்னலர்ந்த மெய்க் கருணையும் நீயும் ||
அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய் |
ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே! ||
(திருப்பள்ளியெழுச்சி 10)
இயற்கை வளங்கள் நிறைந்து காணப்படும் திருப்பெருந்துறை திருத்தலத்தில் உறையும் ஈசனே! பூவுலகில் அவதரித்த அடியார்கள் அனைவரும் உன்னால் ஆட்கொள்ளப்படுகின்றனர். ஆனால் பூவுலகில் அவதரிக்காத காரணத்தால் ஒவ்வொரு தினத்தையும் வீணே கழிப்பதாக மகாவிஷ்ணுவும், அவரது உந்தித் தாமரையில் அவதரித்த பிரம்மதேவரும் வருந்துகின்றனர்.
அதனால் நீ கருணையுடன் எழுந்தருளி எங்கள் அனைவரையும் ஆட்கொள்ள வேண்டும். யாருக்கும் கிடைக்காத அமுதமாக நீ போற்றப்படுகிறாய். உன்னை வணங்கினால், யாருக்கும் எந்தக் குறையும் இருக்காது என்பதும், நீ அனைவரையும் காத்தருள்வாய் என்பதும் திண்ணம். உடனே நீ துயில் எழ வேண்டும் என்று மாணிக்கவாசகர் சிவபெருமானை நோக்கி பாடுகிறார்.