

மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும் |
சீரியசிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து, ||
வேரிமயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி, |
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப், ||
போதருமாப் போலேநீ பூவைப்பூவண்ணா! உன் |
கோயில்நின்றும் இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய ||
சீரிய சிங்காசனத்திருந்து யாம் வந்த |
காரியம் ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்! ||
(திருப்பாவை)
திருமாலின் நரசிம்ம அவதார சிறப்புகளை இப்பாசுரம் விளக்குகிறது. பாவை நோன்பு இருக்கும் பெண்கள், “மழை நேரத்தில் குகைக்குள் உறங்கிக் கொண்டிருந்த ஆண் சிங்கம், பிடரியை சிலுப்பியபடி கர்ஜனை செய்து வெளியே வருகிறது.
அப்படிப்பட்ட ஆண் சிங்கத்தைப் போன்று நீ உடனே புறப்படு கண்ணா! உனது சிம்மாசனத்தில் வந்து அமர்ந்து, நாங்கள் எதற்காக வந்திருக்கிறோம் என்பதை உணர்ந்து எங்களுக்கு அருள் புரிய வேண்டும்” என்று கண்ணனை வேண்டுகின்றனர். வழக்கமாக பக்தர்கள் கண்ணனிடம் வேண்டும்போது, தங்களுக்கு அது வேண்டும் இது வேண்டும் என்று கேட்பார்கள். ஆனால் ஆயர்குலப் பெண்கள் கண்ணனிடம் வேண்டும்போது, அவனையே கேட்கின்றனர்.
மனதை ஒருமுகப்படுத்தி வேண்டினால் பலன் நிச்சயம்...!
கூவின பூங்குயில் கூவின கோழி
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம் ||
ஓவின தாரகை ஒளி ஒளி உதயத்து
ஒருப்படுகின்றது விருப்பொடு நமக்குத் ||
தேவ நற்செறி கழல் தாளிணை காட்டாய்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே! ||
யாவரும் அறிவரியாய் எமக்கெளியாய்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே. ||
(திருப்பள்ளியெழுச்சி)
அதிகாலைப் பொழுதை உணர்த்தும் விதமாக குயில்களும், கோழிகளும் கூவிவிட்டன. குருகுப் பறவைகள் சப்தம் எழுப்பியபடி இருக்கின்றன. சங்குகள் முழங்கும் ஒலியும் கேட்கிறது. இதுவரை மின்னிய நட்சத்திரங்கள், சூரிய ஒளியுடன் கலந்து ஒன்றிவிட்டன. திருப்பெருந்துறையில் உறையும் ஈசனே! என் மனமும் எதைப் பற்றியும் யோசிக்காமல், எதிலும் லயிக்காமல் உன் நினைவில் உன்னுடனேயே ஒன்றிவிட்டது.
எளிமையாக காட்சி அருளும் சிவபெருமானே! எனக்கு உன் திருவடியைக் காட்டுவாயாக. தேவர்களாலும் பிறராலும் அறிய முடியாத எம்பெருமானே! உறக்கம் நீங்கி எழுவாயாக என்று மாணிக்கவாசகர் பாடுகிறார். மனதை ஒருமுகப்படுத்தி ஈசனை வேண்டினால் நிச்சயம் பலனுண்டு என்பது இப்பாடலின் உட்கருத்தாகும்.