

மயிலாப்பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் தேவஸ்தானத்தில் அமைந்துள்ள ஸ்ரீ நிவாஸ பெருமாள் கோயிலில் நேற்று முன் தினம் மகா சம்ப்ரோக் ஷணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். | படங்கள்: எம்.ஸ்ரீநாத் |
சென்னை: மயிலாப்பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் தேவஸ்தானத்தில் ஸ்ரீஅலர்மேல் மங்கா நாயிகா சமேத ஸ்ரீ ஸ்ரீ நிவாஸ பெருமாள் கோயிலில் மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
சென்னை, மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ வேதாந்த தேசிகர் தேவஸ்தானம், 4 நூற்றாண்டுகளுக்கு முன் தோன்றியதாகக் கூறப்படும் பழமையான கோயிலாக அறியப்படுகிறது. 1832-ம் ஆண்டில் பக்தர்கள் சிலரால் ஸ்ரீ வேதாந்த தேசிகர், ஹயக்ரீவர் விக்கிரகங்கள் ஸ்தாபிக்கப்பட்டன.
1924-ம் ஆண்டு இந்து குழுமத்தின் பங்களிப்புடன் ஸ்ரீ நிவாசப் பெருமாள் மற்றும் அலர்மேல் மங்கை தாயார் விக்கிரகங்கள் ஒரே சந்நிதியில் நிறுவப்பட்டன. 1975-ம் ஆண்டு நடைபெற்ற மஹா சம்ப்ரோக்ஷணத்தில், கல்கத்தா பாங்கூர் அறக்கட்டளையின் பங்களிப்புடன் தாயாருக்கு தனி சந்நிதி கட்டப்பட்டது.
பின்னர் ஆண்டாள், ராமர், லட்சுமி ஹயக்ரீவர், நரசிம்மர், ஸ்ரீ சக்கரத்தாழ்வார், ஸ்ரீ பேயாழ்வார், ஆஞ்ச நேயர், ஆழ்வார்கள், ஆச்சார்யர் விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, ஓர் ஆண்டில் 230 நாட்களுக்கும் மேல் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன.
பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் ஸ்ரீ அலமேலு மங்கா சமேத ஸ்ரீநிவாஸ பெருமாள்.
அண்மையில் நடைபெற்ற அறங்காவலர் குழு கூட்டத்தில் 2026-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இக்கோயிலில் மகா சம்ப்ரோக் ஷணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கடந்த 12-ம் தேதி மாலை முதல் பூர்வாங்க பூஜைகள் தொடங்கின.
அன்றைய தினம் மாலை 7 மணி முதல் பகவத் பிரார்த்தனை, அனுக்ஞை, புண்யாஹவாசனம், வாஸ்து சாந்தி ஹோமம் நடைபெற்றன. மார்ச் 15-ம் தேதி மதியம் 2 மணி முதல் ஸ்ரீ பெருமாள், ஸ்ரீ தாயார், ஸ்ரீ ஆண்டாள், ஸ்வாமி தேசிகன் - உற்சவர்- 108 கலச விசேஷ திருமஞ்சனம் நடைபெற்றன. மார்ச் 16-ம் தேதி காலை 9.15 முதல் 10.30 மணிக்கு உள்ளான முஹூர்த்தத்தில் மகா சம்ப்ரோக் ஷணம் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து சாற்றுமுறை, ஆசார்யாதிகள் பஹூமானங்கள் நடைபெற்றன. மாலை 4 மணி அளவில் ஸ்ரீ பெருமாள் - தாயார் திருக்கல்யாணம் நடைபெற்றது. மாலை 7 மணி அளவில் ஸ்ரீ பெருமாள், தேசிகன், விசேஷ திருவீதி புறப்பாடு, பின்பு தாயாருடன் உள் புறப்பாடு நடைபெற்றது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர்கள், ஆர்.அனந்தபத்மநாபன், ஆர்.முகுந்தன், எல்.என். ஸ்ரீநிவாசன் செய்திருந்தனர். திரளான பக்தர்கள் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.