மகரஜோதி வழிபாட்டின் நிறைவு பகுதியாக சபரிமலை ஐயப்பன் கோயிலில் 18 படிகளுக்கு சிறப்பு வழிபாடு!
மகரஜோதி வழிபாட்டின் நிறைவுப் பகுதியாக, 18 படி களுக்கு சிறப்பு பூஜை தற் போது நடைபெற்று வரு கிறது. பெருவழிப் பாதை மூடப் பட்டுள்ளதுடன் இன்றுடன் நெய் அபிஷேக வழிபாடு நிறைவடைகிறது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசித்தி பெற்ற மகரஜோதி திருவிழா கடந்த 14-ம் தேதி நடைபெற்றது. அன்று ஐயப்பனுக்கு பாரம்பரிய நகைகள் அணிவிக்கப்பட்டன. சர்வ அலங்காரத்தில் ஐயப்பனையும், தொடர்ந்து பொன்னம்பலமேட்டில் தெரிந்த மகரஜோதியையும் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தற்போது, படிபூஜை வழிபாடு நடைபெற்றுவருகிறது. இப்பூஜை, மகர ஜோதி விழா முடிந்த இரண்டாம் நாள் முதல் 4 நாட்களுக்கு நடைபெறும். அதன்படி, இப்பூஜை நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று மாலையில் தீபாராதனைக்குப் பின்பு 18 படிகளும் தூய்மைப்படுத்தப்பட்டன. பின்னர், ஒவ்வொரு படியிலும் பட்டுத்துணி விரிக்கப்பட்டு, பூக்களால் அலங்கரிக்கப்பட்டது.
தொடர்ந்து, ஒவ்வொரு படியிலும் தீபம் ஏற்றி தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு 18-ம் படி முன் அமர்ந்து வழிபாடுகளை மேற்கொண்டார். திருமந்திரங்கள் முழங்க தீபாராதனை காட்டப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றன.
ஒரு மணி நேரத்துக்குப் பிறகு இப்பூஜை முடிந்தது. அதையடுத்து, பக்தர்கள் 18-ம் படியேற அனுமதிக்கப்பட்டனர். இதில் மேல்சாந்தி பிரசாத் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
வரும் 19-ம் தேதி வரை தினமும் மாலையில் தீபாராதனைக்குப் பிறகு இந்த வழிபாடு நடைபெற உள்ளது. இந்த படிபூஜையானது, உபயதாரர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான கட்டணம் ரூ.1,37,900 ஆகும். சபரிமலையில் மேற்கொள்ளப்படும் பல்வேறு வழிபாடுகளில் இதற்குத்தான் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு 2040-ம் ஆண்டு வரை முடிந்துவிட்டதாக, தேவசம் போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இறுதி நாள் படிபூஜை முடிந்ததும், மகரஜோதி வழிபாடுகள் அனைத்தும் நிறை வடையும். இதற்கு முன்னோட்ட மாக, இன்று நெய்யபிஷேகம் நடக்கிறது. 19-ம் தேதி இரவு 11 மணி வரை தரிசனத்துக்காக பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். 20-ம் தேதி பந்தள மன்னன் பிரதிநிதியின் பிரத்யேக பின்பிரக் தரிசனத்துக்குப் பின்பு காலை 6.30 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும்.
அதன் பின்னர், கும்பம் மாத (மாசி) வழிபாட்டுக்காக பிப்ரவரி 12-ம் தேதி மாலை கோயில் நடை திறக்கப்படும். இந்த ஆண்டுக்கான மகரஜோதி வழிபாடுகள் நிறைவுப் பகுதியை எட்டியுள்ள தால், எருமேலி - பம்பை இடையேயான வனப்பகுதி மூடப்பட்டது. சத்திரம், புல்மேடு வழியே 19-ம் தேதி மதியம் வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
