

கோப்புப்படம்
மதுரை: உலகப் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, சி்த்திரை வீதிகளில் பந்தல் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
சித்திரைத் திருவிழாவின் முதல் நாளான ஏப்ரல் 19-ம் தேதி காலை 10.30 மணியளவில் கொடியேற்றம் நடைபெறுகிறது. தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்மன் புறப்பாடு நடைபெறுகிறது.
முக்கிய விழாவான மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் ஏப்.26-ம் தேதி இரவு 7.05 மணியளவில் நடைபெறவுள்ளது. ஏப்.27-ல் திக்குவிஜயம் நடைபெறுகிறது. முக்கிய விழாவான மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் ஏப்.28-ம் தேதி காலை 8.35 மணியளவில் நடைபெறுகிறது.
29-ம் தேதி காலை 6 மணியளவில் தேரோட்டம் நடைபெறுகிறது. ஏப்.30-ம் தேதி தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவுபெறுகிறது. இத்திருவிழாவை முன்னிட்டு, மீனாட்சி அம்மன் கோயிலைச்சுற்றி பக்தர்கள் நின்று தரிசிக்கும் வகையில், சித்திரை வீதிகளில் பந்தல் அமைக்கும் பணி நேற்று முன்தினம் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
விழா ஏற்பாடுகளை, அறங்காவலர் குழு தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன், கோயில் இணை ஆணையர் நா.சுரேஷ் தலைமையில் அறங்காவலர்கள், கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
இதேபோல், அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் சித்திரைத் திருவிழா ஏப்.29-ம் தேதி தொடங்குகிறது. ஏப்.30-ல் மதுரை மூன்றுமாவடியில் கள்ளழகரை வரவேற்கும் எதிர்சேவை நடைபெறும்.
தொடர்ந்து, மே 1-ம் தேதி சித்ரா பவுர்ணமி தினத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருள்கிறார். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றில் திரண்டு கள்ளழகரை தரிசனம் செய்வார்கள். விழா ஏற்பாடுகளை, கோயில் இணை ஆணையர் ஆர்.ஹரிஹரன் தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.