

திருவண்ணாமலை: கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தீபத் திருவிழா நிறைவாக 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் மகாதீபத்தை தரிசனம் செய்தனர்.
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மிகவும் பிரசித்தி பெற்ற விழாவான கார்த்திகை தீபத் திருவிழா மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ‘தான்’ என்ற அகந்தையை அழிக்க சிவபெருமான் திருவண்ணாமலையில் அடிமுடி காண முடியாத அக்னிப் பிழம்பாக காட்சியளித்தார். அந்த நாளே திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது .
அதன்படி, இந்தாண்டு கடந்த நவ.24-ம் தேதி கொடியேற்றத்துடன் கார்த்திகை தீபத் திருவிழாவின் 10 நாள் உற்சவம் ஆரம்பமானது. அதைத்தொடர்ந்து நடைபெற்று வந்த உற்சவத்தில் கடந்த நவ.30-ம் தேதி மகா தேரோட்டம் நடைபெற்றது. விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத முருகர், உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் தனித்தனி தேர்களில் எழுந்தருளி பவனி வந்தனர். விழாவின் 10-ம் நாள் உற்சவம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
அண்ணாமலையார் சந்நிதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் அதிகாலை 4 மணிக்கு ஏகன் அநேகன் தத்துவத்தை உலகுக்கு எடுத்துரைத்து பஞ்ச பூதங்களும் நானே என்பதை இறைவன் உணர்த்தும் பரணி தீபத்தை சிவாச்சாரியார்கள் ஏற்றினர். பின்னர், பரணி தீபமானது அம்மன் சந்நிதி, விநாயகர் சந்நிதி உள்ளிட்ட அனைத்து சந்நிதிகளுக்கும் கொண்டு செல்லப்பட்டு தீபம் ஏற்றப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் மழையையும் பொருட்படுத்தாமல் திரண்டு தரிசனம் செய்தனர்.
மாலை மகாதீப பெருவிழா நடைபெற்றது. மாலை 4 மணி முதல் அண்ணாமலையார் கோயில் 3-ம் பிரகாரத்தில் உள்ள கொடிமரம் முன்பு உள்ள தீபதரிசன மண்டபத்தில் பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத முருகர், உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். பின்னர் ஆண் - பெண் சமம் என்ற தத்துவத்தை உலகுக்கு உணர்த்த உமையாளுக்கு தனது இடபாகத்தை வழங்கிய அண்ணாமலையார் “அர்த்தநாரீஸ்வரர்” ஆக ஆனந்த தாண்டவத்துடன் மாலை 5.55 மணியளவில் தங்க கொடிமரம் முன்பு எழுந்தருளினார்.
ஆண்டுக்கு ஒரு முறை மகா தீபத்தன்று மட்டுமே சில நிமிடங்கள் காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் காட்சியை தரிசித்த பக்தர்கள், அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தி பரவசத்துடன் முழக்கமிட்டனர். அப்போது, கொடி மரம் அருகே உள்ள அகண்ட தீபம் ஏற்றப்பட்டதும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியில் பருவதராஜ குல வம்சத்தினர் மகா தீபம் ஏற்றினர். மகா தீபம் ஏற்றப்பட்டதும், கோயிலின் நவ கோபுரங்கள் மற்றும் வளாகங்களில் மின்விளக்கு அலங்காரம் ஜொலித்தது. மேலும், கோயில், வீடுகளில் அகல் விளக்கு ஏற்றி பக்தர்கள் வழிபட்டனர்.
3,500 கிலோ நெய்: மலை மீது மகா தீபம் ஏற்ற 3,500 கிலோ நெய், 1,000 மீட்டர் திரி பயன்படுத்தப்பட்டது. மலை மீது ஏற்றப்பட்ட மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சியளிக்கும்.
கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி 14 கி.மீ. தொலைவு உள்ள தீப மலையை சுற்றி அதிகாலையில் இருந்து பக்தர்கள் கிரிவலம் சென்றனர். விட்டு விட்டு பெய்த மழையையும் பொருட்படுத்தாமல் நேற்று முதல் இன்று வரை விடிய,விடிய 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் சென்றனர். தொடர்ந்து, இன்று பவுர்ணமி தொடங்குகிறது. நாளை மறுநாள் வார விடுமுறை என்பதால் பக்தர்கள் வருகை மேலும் அதிகரிக்கும்.
மேலும், இன்று முதல் 3 நாட்களுக்கு இரவு ஐயங்குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து, உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் கிரிவலம் செல்லும் நிகழ்வு நடைபெறும். பின்னர் கார்த்திகை தீபத் திருவிழா டிச.7-ம் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் நிறைவு பெறுகிறது.
விழாவில், இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன், ஆட்சியர் க.தர்ப்பகராஜ், மாநில தடகள சங்க துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், முன்னாள் நகராட்சி மன்றத் தலைவர் இரா.தரன் உட்பட முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சியினர், அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். தீபத் திருவிழாவை முன்னிட்டு வடக்கு மண்டல காவல் துறை தலைவர் அஸ்ராகார்க் தலைமையில் 15 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.