திருவண்ணாமலையில் 2,668 அடி மலை உச்சியில் மகா தீபம் - பல லட்சம் பக்தர்கள் தரிசனம்

திருவண்ணாமலையில் 2,668 அடி மலை உச்சியில் மகா தீபம் -  பல லட்சம் பக்தர்கள் தரிசனம்
Updated on
2 min read

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தீபத்திருவிழாவின் பத்தாம் நாள் உற்சவத்தின் நிறைவாக 2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. மாகதீபத்தை பல லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மிகவும் பிரசித்தி பெற்ற விழாவான கார்த்திகை தீப திருவிழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது . இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழா கடந்த நவ.24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள் உற்சவம் ஆரம்பமானது. அதைத் தொடர்ந்து நடைபெற்று வந்த உற்வசத்தில் கடந்த நவ.30-ம் தேதி மகா தேரோட்டம் நடைபெற்றது. விநாயகர், வள்ளிதெய்வானை சமேத முருகர், உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார்,பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் தனித்தனி தேர்களில் எழுந்தருளி பவனி வந்தனர்.

10-வது நாள் உற்சவமான இன்று அண்ணாமலையார் சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் அதிகாலை 4 மணிக்கு ஏகன் அநேகன் தத்துவத்தை உலக்கு எடுத்துரைத்து பஞ்சபூதங்களும் நானே என்பதை இறைவன் உணர்த்தும் பரணி தீபத்தை சிவாச்சாரியார்கள் ஏற்றினர்.

பின்னர் பரணி தீபமானது அம்மன் சன்னதி ,விநாயகர் சன்னதி உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் கொண்டு செல்லப்பட்டு தீபம் ஏற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் மழையையும் பொருட்படுத்தாமல் திரண்டிருந்து தரிசனம் செய்தனர்.

மாலையில் மகா தீபப் பெருவிழா நடைபெற்றது. 4 மணி முதல் அண்ணாமலையார் கோயில் 3-ம் பிரகாரத்தில் உள்ள கொடிமரம் முன்பு உள்ள தீப தரிசன மண்டபத்தில் பஞ்சமூர்த்திகளா விநாயகர், வள்ளிதெய்வானை சமேத முருகர், உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். பின்னர் ஆண் - பெண் சமம் என்ற தத்துவத்தை உலகுக்கு உணர்த்த உமையாவளுக்கு தனது இடபாகத்தை வழங்கிய அண்ணாமலையார் "அர்த்தநாரீஸ்வரர்" ஆக ஆனந்ததாண்டவத்துடன் மாலை 5.50 மணி அளவில் தங்க கொடிமரம் முன்பு எழுந்தருளினார்.

ஆண்டுக்கு ஒரு முறை மகா தீபத்தன்று மட்டுமே சில நிமிடங்கள் காட்சி தரும் அர்த்தநாரீஸ்வரர் காட்சியை தரிசித்த பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தி பரவசத்துடன் முழக்கமிட்டனர். அப்போது, கொடிமரம் அருகே உள்ள அகண்ட தீபம் ஏற்றப்பட்டதும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியில் பருவதராஜ குல வம்சத்தினர் மகா தீபம் எற்றினர். மகா தீபம் ஏற்றப்பட்டதும்,கோயிலின் நவ கோபுரங்கள் மற்றும் வளாகங்களில் மின்விளக்கு அலங்கரம் ஜொலித்தது. மேலும், கோயில், வீடுகளில் அகல் விளக்கு ஏற்றி பக்தர்கள் வழிபட்டனர்.

மலை மீது மகா தீபம் ஏற்ற 3,500 கிலோ நெய், ஆயிரம் மீட்டர் திரி பயன்படுத்தப்பட்டது. மலைமீது ஏற்றப்பட்ட மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி அளிக்கும். கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி 14 கி.மீ. தொலைவு உள்ள தீபமலையை சுற்றி அதிகாலையில் இருந்து பக்தர்கள் கிரிவலம் சென்றனர். விட்டு விட்டுபெய்த மழையினையும் பொருட்படுத்தாமல் இன்று முதல் நாளை வரை விடிய விடிய 30 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் மேற்கொள்கின்றனர்.

மேலும், நாளை முதல் 3 நாட்களுக்கு இரவு ஐயங்குளத்தில் தெப்பல் உற்சவம் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து, உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் கிரிவலம் செல்லும் நிகழ்வு நடைபெறும். பின்னர் கார்த்திகை தீபத்திருவிழா டிச.7-ம் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் நிறைவு பெறுகிறது.

இந்த விழாவில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன், ஆட்சியர் க.தர்ப்பகராஜ், மாநில தடகள சங்க துணைத்தலைவர் மருத்துவர் எ.வ.வே.கம்பன், முன்னாள் நகராட்சி தலைவர் இரா. ஸ்ரீதரன் உள்பட முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சியினர், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தீபத் திருவிழாவையொட்டி வடக்கு மண்டல காவல் துறை தலைவர் அஸ்ராகார்க் தலைமையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலையில் 2,668 அடி மலை உச்சியில் மகா தீபம் -  பல லட்சம் பக்தர்கள் தரிசனம்
LIVE: திருவண்ணாமலை தீபத் திருவிழா நேரலை | மலை உச்சியில் மகா தீபம்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in