தி.மலை அண்ணாமலையார் கோயிலில் அதிகாலையில் ஏற்றப்பட்ட பரணி தீபம்

தி.மலை அண்ணாமலையார் கோயிலில் அதிகாலையில் ஏற்றப்பட்ட பரணி தீபம்
Updated on: 
2 min read

திருவண்ணாமலை: கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது . மாலை 6 மணிக்கு கோயிலுக்கு பின்புறமுள்ள 2,668 அடி உயர மலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீப திருவிழா மிக விமர்சியாக கொண்டாடப்படுகிறது. தான் என்ற அகந்தையை அழிக்க சிவ பெருமான் திருவண்ணாமலையில் அடிமுடி காணமுடியாத அக்னி பிழம்பாக காட்சியளித்ததாக ஐதீகம். அந்த நாளே கார்த்திகை தீபதிருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

இறைவன் ஒருவனே பஞ்சபூதங்களை அரசாளும் ஏகனாக இருக்கும் இறைவன் ஒருவனே அனேகனாகி (பஞ்சமூர்த்திகளாகி ) படைத்தல் , காத்தல் , அழித்தல் , மறைத்தல், அருளல் ஆகிய ஐந்து தொழில்களை செய்கிறார் என்பதை விளக்கும் வகையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

அதன்படி, இந்தாண்டு தீபத்திருவிழா நவ.15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பத்தாம் நாளான இன்று நவ.24-ம் தேதி தீப திருவிழா நடைபெறுகிறது. இன்று அதிகாலை அண்ணாமலையார் கோயில் நடை திறக்கப்பட்டு, அண்ணாமலையார் உண்ணாமுலையம்மனுக்கு மஞ்சள், சந்தனம், பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர், தேன் ஆகியவற்றால் சிறப்பு அபிசேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

பின்னர் அண்ணாமலையார் சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. பின்னர் பரணி தீபமானது ஓடல், எக்காளம் இசை வாத்தியங்களுடன் அம்மன் சன்னதி, விநாயகர் சன்னதி உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் கொண்டு செல்லப்பட்டு தீபம் ஏற்றப்பட்டது . மேலும் வைகுந்த வாயில் வழியாக பரணி தீபம் காட்சியளித்தது.

இதில் உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார், மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க், வடக்கு மண்டல காவல்துறை தலைவர் பிரவீன் குமார் அபினபு, வேலூர் சரக டிஐஜி மகேஷ், எஸ்பி உதயகுமார், கோயில் இணை ஆணையர் பரணிதரன், தக்கார் மீனாட்சி சுந்தரம், சட்டப்பேரவை உறுப்பினர் அபிஷேக் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதையடுத்து தீபவிழாவின் உச்சக்கட்ட நிகழ்வாக மகாதீபம் இன்று மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்படுகிறது. இதற்காக ஐந்தரை அடி உயரம், 200 கிலோ எடை கொண்ட செம்பால் ஆன மகாதீப கொப்பரை நேற்று மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. தீபம் ஏற்றுவதற்கு பயன்படுத்தப்படும் ஆயிரம் மீட்டர் காடா துணி, 3,500 கிலோ நெய் ஆகியவை இன்று காலை மலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

மாலை 6 மணிக்கு அண்ணாமலையார் கோயிலில் உள்ள தீப தரிசன மண்டபத்தில் பஞ்ச மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள்வார்கள். அப்போது ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே சில நொடிகள் காட்சிதரும் அர்த்தநாரீஸ்வரர் ஆனந்த தாண்ட வத்தில் காட்சியளிப்பார் . அப்போது , கோயில் தங்க கொடிமரம் அருகேயுள்ள அகண்டத்தில் தீபம் ஏற்றியதும், மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. அர்த்தநாரீஸ்வரர் வெளியே வந்த பின்னரே கோயில் வளாகத்தில் மின் விளக்கு ஒளிர்விக்கப்படும்.

தி.மலை அண்ணாமலையார் கோயிலில் அதிகாலையில் ஏற்றப்பட்ட பரணி தீபம்
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் மதுரை முழுவதும் நீதிபதிக்கு ஆதரவாக திடீர் போஸ்டர்கள்

X