

சத்திரம் வனப்பாதை வழியே சபரிமலை சென்ற ஐயப்ப பக்தர்கள்.
குமுளி: சத்திரம் வனப்பாதையின் நுழைவுப்பகுதிக்கு செல்ல ஐயப்ப பக்தர்கள் ஜீப்பு களையே நம்பி இருக்கும் நிலை இருந்தது. இந்நிலையில் கேரள அரசுப் பேருந்துகள் இந்த வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்கத் தொடங்கியுள்ளது. இதனால் பக்தர்களுக்கு பயண நேரமும், கூடுதல் செலவினமும் குறைந்துள்ளது.
சபரிமலைக்கு பாத யாத்திரையாக செல்லும் பக்தர்கள் பலரும் சத்திரம் வனப்பகுதி வழியே செல் கின்றனர். இப்பகுதி தமிழக கேரள எல்லையான குமுளியில் இருந்து 29 கி.மீ. தொலை வில் அமைந்துள்ளது. இந்த வனப்பாதையில் செல்ல தினமும் காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை அனுமதிக் கப்படுகிறது.
அழுதகடவு, கரிமலை பெருவழிப்பாதையைவிட இதில் தூரமும், சிரமமும் குறைவு. மேலும் சந்நிதானத் துக்கும் நேரடியாகச் செல்ல லாம் என்பதால் பலரும் இந்த வழித்தடத்தையே பயன்படுத் துகின்றனர். இதனால் சத்திரம் வரை சொந்த, வாடகை வாகனத்தில் சென்று பின்பு பாதயாத் திரையை இங்கிருந்து தொடங் குகின்றனர்.
பேருந்தில் வருபவர்கள் வண்டிப்பெரியாறு வந்து அங்கிருந்து ஜீப்புகளில் சத்திரம் வரை செல்லும் நிலை உள்ளது. ஜீப்புகளைப் பொறுத்தளவில் ஒருவருக்கு ரூ.100 கட்டணம் ஆகும். 10 பக்தர்கள் சேர்ந்தால்தான் ஜீப் இயக்கப்படும்.
இதனால் பக்தர்களுக்கு கூடுதல் செலவும், நேர விரயமும் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கேரள அரசுப் போக்குவரத்துக் கழகம் இந்த வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்கத் தொடங்கி உள்ளது. தினமும் 16 முறை வண்டிப்பெரியாறு-சத்திரம் வழித்தடத்தின் எதிரெதிர் மார்க்கங்களில் இப்பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதுகுறித்து கேரள போக்குவரத்துக் கழக குமுளி கிளை அதிகாரிகள் கூறுகையில், முதல் பேருந்து குமுளியில் இருந்து காலை 5.30 மணிக்கு புறப்படுகிறது. தொடர்ந்து வண்டிப்பெரியாறில் இருந்து சத்திரத்துக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
கடைசி பேருந்து மாலை 6 மணிக்கு புறப்படும். மதியம் 1 மணி வரையே வனப்பாதையில் அனுமதி உண்டு. இருப்பினும் பக்தர்கள் வசதிக்காக மாலை வரை இயக்கப்படுகிறது. பயணநேரம் 40 நிமிடங்கள் ஆகும். கட்டணம் ரூ.33 பெறப் படுகிறது, என்றனர்.