

காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழாவையொட்டி பவழக்கால் சப்பரத்தில் வீதியுலா வந்த பிச்சாண்டவர். (அடுத்த படம்) கையில் மாங்கனியுடன் பிச்சாண்டவர் கோலத்தில் சிவபெருமான்.
காரைக்கால்: காரைக்கால் அம்மையார் மாங்கனித் திருவிழாவின் சிறப்பு மிக்க நிகழ்வாக, பக்தர்கள் பரவசத்துடன் மாங்கனிகளை வாரி இறைத்து இறைவனை வழிபடும் பிச்சாண்டவர் வீதியுலா நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
63 நாயன்மார்களில் சிறப்பிடம் பெற்றவரும், சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளை கொண்டவருமான காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில், காரைக்கால் கைலாசநாத சுவாமி, நித்ய கல்யாணப்பெருமாள் வகையறா தேவஸ்தானம் சார்பில் ஆண்டுதோறும் மாங்கனித் திருவிழா விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது.
நிகழாண்டு விழா கடந்த 27-ம் தேதி மாப்பிள்ளை (பரமதத்தர்) அழைப்பு வைபவத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் காலை அம்மையார் கோயிலில் புனிதவதியார்- பரமதத்தர் திருக்கல்யாணம், இரவு கைலாசநாதர் கோயிலில் பிச்சாண்டவர் வெள்ளைசாற்றி புறப்பாடு நடைபெற்றது.
2-வது நாள் நிகழ்வாக கைலாசநாதர் கோயிலில் நேற்று அதிகாலை 3 மணியிலிருந்து பிச்சாண்டவர், பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு,மகா தீபாராதனைக்காட்டப்பட்டது. தொடர்ந்து பரமதத்தர் காசுக்கடை மண்டபத்துக்கு (கடைத்தெரு பொய்யாத மூர்த்தி விநாயகர் கோயில்) வரும் நிகழ்வு நடைபெற்றது. பின்னர் சிறப்புமிக்க நிகழ்வான பிச்சாண்டவர் வீதியுலா நடைபெற்றது.
இதையொட்டி சிவபெருமான், பிச்சாண்டவர் கோலத்தில் கையில் மாங்கனியுடன், கைலாசநாதர் கோயில் வாயிலில் பவழக்கால் சப்பரத்தில் எழுந்தருளினார். பின்னர் கைலாசநாதர் கோயில் வாயிலில் இருந்து வேதபாராயணங்கள் முழங்க, சிவபெருமானுக்குரிய ராஜ வாத்தியங்கள் இசைக்க வீதியுலா புறப்பாடு தொடங்கியது.
கைலாசநாதர் கோயில் வீதி, பாரதியார் சாலை, கன்னடியர் வீதி, மாதா கோயில் வீதி வழியாக மாலை வரை நடைபெற்ற வீதியுலாவில் பல்வேறு இடங்களில் ஏராளமான பக்தர்கள் கையில் மாங்கனி, பட்டு வஸ்திரம், பூக்கள் உள்ளிட்டவற்றுடன் நீண்டவரிசையில் நின்று, இறைவனுக்கு படைத்து வணங்கினர். வீதியுலாவின்போது ஏராளமான பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தும் விதமாக மாங்கனிகளை வீசி இறைத்து இறைவனை வழிபட்டனர். அந்த மாங்கனிகளை இறைவனுக்குப் படைக்கப்பட்ட பிரசாதமாகக் கருதியும், திருமணத் தடை, குழந்தைப் பேறின்மை போன்ற நம்பிக்கையின்பேரிலும் தங்கள் வேண்டுதல் நிறைவேறுவதற்காகவும் பக்தர்கள் அவற்றை பிடித்து எடுத்துச் சென்றனர்.
விழாவில் புதுச்சேரி அமைச்சர் ஜி.என்.எஸ்.ராஜசேகரன், மாவட்ட ஆட்சியர் இஷிதா ராட்டி, சார் ஆட்சியர் எம்.பூஜா, புதுச்சேரி டிஐஜி சத்தியசுந்தரம், எம்எல்ஏ வி.விக்னேஸ்வரன், நிர்வாக அதிகாரி (கோயில்கள்) ஆர்.சுப்பிரமணியன், நிர்வாக அதிகாரி சி.விநாயகமூர்த்தி உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.