

திருக்கல்யாணம்
படம்: நா.தங்கரத்தினம்
திண்டுக்கல்: பழநி முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா நிறைவாக திங்கட்கிழமை (நவ.16) காலை திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் நவ.10-ம் தேதி காப்பு கட்டுதலுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது. பக்தர்களும் காப்புக் கட்டி விரதம் இருந்தனர். தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை மற்றும் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நேற்று (நவ.15) இரவு நடைபெற்றது.
சூரன்களை வதம் செய்து வெற்றி பெற்ற சண்முகருக்கு வள்ளி, தேவசேனாவை மணம் முடித்து வைக்கும் திருக்கல்யாண வைபவம் திங்கட்கிழமை (இன்று) காலை 10 மணிக்கு மேல் மலைக்கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
மணக்கோலத்தில் சண்முகர் எழுந்தருளி வள்ளி, தேவசேனாவை மணமுடித்தார். கோயில் இணை ஆணையர் ஹரிஹரன், துணை ஆணையர் வெங்கடேஷ், அறங்காவலர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருக்கல்யாணத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மணக்கோலத்தில் அருள்பாலித்த சண்முகர், வள்ளி, தேவசேனாவை வழிபட்டனர். திருக்கல்யாணத்தின் போது பெண்கள் புதுத்தாலி அணிந்து கொண்டனர்.
விழாவில் அனைவருக்கும் திருக்கல்யாண விருந்து வழங்கப்பட்டது. திருக்கல்யாணம் முடிந்ததும் தேவஸ்தானம் சார்பில் ‘பாய்ன்ட் ஆப் சேல்’ கருவி மூலம் பக்தர்களிடம் மொய் வசூலிக்கப்பட்டது. பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் இரவு 7 மணிக்கு மேல் முத்துக்குமாரசுவாமிக்கு வள்ளி, தெய்வானையுடன் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.