காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் குடமுழுக்கு: சங்கர மடம் மடாதிபதிகள் முன்னிலையில் புனித நீர் ஊற்றப்பட்டது

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி சங்கர மடத்தின் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்,  இளைய மடாதிபதி ஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோர் முன்னிலையில் புனித நீர் ஊற்றப்பட்டு தீபாராதனைகள் காட்டப்பட்டது.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி சங்கர மடத்தின் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்,  இளைய மடாதிபதி ஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோர் முன்னிலையில் புனித நீர் ஊற்றப்பட்டு தீபாராதனைகள் காட்டப்பட்டது.

Updated on
2 min read

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கான திருப்பணிகள் ரூ.29 கோடியில் நிறைவுபெற்ற நிலையில் இன்று (டிசம்பர் 8-ம் தேதி) குடமுழுக்கு விழா நடைபெற்றது. இந்த குடமுழுக்கு விழாவையொட்டி காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதிகள் முன்னிலையில் கோயில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது.

பஞ்சபூத தலங்களில் ‘மண்’ (பிரித்வி) தலமாகப் போற்றப்படும் கோயில் காஞ்சிபுரம் அருள்மிகு ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் திருக்கோயிலில். வரலாற்றுப் பெருமையும், புராணச் சிறப்பும் வாய்ந்த இந்தக் கோயிலில் கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் பாலாலயம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்தக் கோயிலுக்கு சுமார் ரூ.29 கோடி மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, குடமுழுக்கு விழாவுக்காகன பிரம்மாண்டமான நவகுண்ட யாகசாலை அமைக்கப்பட்டது. இதில் 170 சிவாச்சாரியார்கள் மற்றும் 170 வேத விற்பன்னர்கள் பங்கேற்க, கடந்த 4-ம் தேதி விக்னேசுவர பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. தொடர்ந்து 30-க்கும் மேற்பட்ட ஓதுவார்கள் பங்கேற்ற திருமுறைப் பாராயணம் மற்றும் விசேஷ யாகபூஜைகள் நடைபெற்றன.

குடமுழுக்கு விழா இன்று (டிசம்பர் 8-ம் தேதி) நடைபெற்றது. இந்த குடமுழுக்கு விழாவையொட்டி அதிகாலை 5 மணியளவில் யாகசாலையிலிருந்து மேள தாளங்கள், சிவ வாத்தியங்கள் முழங்க புனித நீர் அடங்கிய கலசங்கள் கோபுரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் இளைய பீடாதிபதி ஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோர் முன்னிலையில், மூலவர் கோபுரம் மற்றும் ராஜகோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது.

அப்போது கூடியிருந்த பக்தர்கள் பக்திப் பரவசத்தில் ‘ஓம் நமச்சிவாய’ என்ற கோஷங்களை எழுப்பினர். ‘அரோகரா’ எனவும் எழுப்பிய பக்தி முழக்கம் விண்ணை எட்டியது. தொடர்ந்து மூலவருக்கும், பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகங்களும், மகா தீபாராதனைகளும் நடைபெற்றன.

இந்த விழாவில் காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் ஸ்ரீ சிதம்பரநாத சுவாமிகள், தருமபுரம் ஆதீனம் ஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் ஆகியோர் கலந்துகொண்டு ஆசியளித்தனர். மேலும், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி தீப்தி அறிவுமதி, காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் எழிலரசன் மற்றும் நீதித்துறை நடுவர்கள் உள்பட முக்கியப் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் எம்.வி.எம்.வேல்மோகன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சி.குமரதுரை, செயல் அலுவலர் ப.முத்துலட்சுமி மற்றும் விழாக்குழுவினரும் செய்திருந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.சண்முகம் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். விழாவை முன்னிட்டு ஆலயம் முழுவதும் வண்ண மின்விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நகரின் பல்வேறு இடங்களில் தன்னார்வ அமைப்புகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ஏகாம்பரநாதர் கோயிலைச் சுற்றி அனைத்து தெருக்களிலும் மக்கள் வெள்ளம்போல் காட்சி அளித்தனர். இதனால் அந்தப் பகுதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. வெளியூர்களில் இருந்து வந்த பேருந்துகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் நகரின் வெளியிலேயே நிறுத்தப்பட்டன.

<div class="paragraphs"><p>காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி சங்கர மடத்தின் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்,&nbsp;&nbsp;இளைய மடாதிபதி ஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோர் முன்னிலையில் புனித நீர் ஊற்றப்பட்டு தீபாராதனைகள் காட்டப்பட்டது.</p></div>
“தமிழகம், மே.வங்கத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அமோக வெற்றி” - அமித் ஷா கணிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in