

அகமதாபாத்: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் மேற்கு வங்கம் மற்றும் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் பல்வேறு அரசு திட்டங்களை ஞாயிற்றுக்கிழமை அவர் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது: 2014 மக்களவைத் தேர்தல் தொடங்கி தற்போது வரை (2025) பாஜக தொடர் வெற்றிகளைப் பெற்று வருகிறது. 2024 மக்களவை தேர்தல் வெற்றியின் மூலம் தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர் ஆனார் நரேந்திர மோடி. இது பல ஆண்டுகளுக்குப் பின்னர் படைக்கப்பட்ட சாதனையாகும்.
பிரதமர் மோடியின் தலைமையிலான ஆட்சியில், இந்திய தேசம் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி கண்டு, உலக அளவில் சிறந்த நாடாக திகழும் என்ற நம்பிக்கையை மக்கள் கொண்டுள்ளனர்.
எதிர்க்கட்சிகளுக்கு தலைவர்களோ அல்லது கொள்கைகளோ இல்லை. தேசத்தின் எந்தப் பகுதியிலும் அவர்கள் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. இந்த மேடையில் இருந்து மம்தா பானர்ஜி மற்றும் ஸ்டாலினுக்கு ஒன்றை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். பிஹாரை தொடர்ந்து மேற்கு வங்கத்திலும், தமிழகத்திலும் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்று திருப்புமுனையை ஏற்படுத்தும். அதற்கு தயாராக இருங்கள்.
எதிர்வரும் தேர்தல் முடிவுகள் வரட்டும். மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸும், தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகமும் துடைத்தெறியப்படும். இவ்வாறு அமித் ஷா கூறினார்.
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக மற்றும் பாஜக அங்கம் இடம்பெற்றுள்ளன. விரைவில் அமித் ஷா தமிழகம் வர உள்ளதாகவும் தகவல் நிலவுகிறது. இந்நிலையில், ஸ்டாலினுக்கு அமித் ஷா விடுத்துள்ள இந்த செய்தி அரசியல் வட்டாரத்தில் கவனம் பெறுகிறது.