

மதுரை அழகர்கோவிலில் இருந்து தங்கப் பல்லக்கில் நேற்று மாலை மதுரைக்கு புறப்பட்ட கள்ளழகரை தரிசனம் செய்த பக்தர்கள். | படம்: நா.தங்கரத்தினம் |
மதுரை: மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்க அழகர் கோயிலில் இருந்து நேற்று மாலை சுந்தரராஜபெருமாள், கள்ளர் திருக்கோலத்தில் மதுரைக்கு புறப்பட்டார்.
மதுரை அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழா ஏப்.27-ம் தேதி முதல் மே 6-ம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவின் முதல் 2 நாட்களில் திருக்கல்யாண மண்டபத்தில் சுந்தரராஜ பெருமாள் எழுந்தருளினார்.
மூன்றாம் நாளான நேற்று காலை சுந்தரராஜ பெருமாள் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். பின்னர் மாலையில் கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரராஜ பெருமாள், மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிப்பதற்காக கள்ளழகர் திருக்கோலத்தில் தங்கப் பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டார்.
முன்னதாக கோயில் ராஜகோபுர வாசலில் உள்ள பதினெட்டாம்படி கருப்பணசாமி சந்நிதியில் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. கருப்பணசாமியிடம் உத்தரவு பெற்று கள்ளழகர் நேற்று மாலை 6.25 மணியளவில் மதுரைக்கு புறப்பட்டார்.
நான்காம் நாளான இன்று (ஏப். 30) மதுரை மாநகர எல்லையான மூன்றுமாவடியில் அதிகாலை 5.30 மணியளவில் கள்ளழகருக்கு எதிர்சேவை நடைபெறும்.
ஆண்டாள் நாச்சியார் மாலை
தொடர்ந்து பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளி இரவு 8.30 மணியளவில் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயிலில் எழுந்தருள்கிறார்.
அங்கு திருமஞ்சனமாகி தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி, வில்லிபுத்தூர் ஆண்டாள் நாச்சியார் சூடிக்கொடுத்த மாலையை சூடிக் கொள்கிறார்.
மே 1-ம் தேதி அதிகாலை கோயிலில் இருந்து புறப்பாடாகி தல்லாகுளம் கருப்பணசாமி கோயில் முன்பு அதிகாலை 2.30 மணியளவில் ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருள்கிறார். அங்கிருந்து வைகை ஆறு நோக்கி தங்கக் குதிரை வாகனத்தில் புறப்படுகிறார்.
நாளை வைகையில் எழுந்தருளல்
வைகை ஆற்றில் எழுத்தாணிக்காரத்தெரு வீரராகவப் பெருமாள் வெள்ளி குதிரை வாகனத்தில் வரவேற்க, அதிகாலை 5.35 மணி முதல் 5.55 மணிக்குள்கள்ளழகர் ஆற்றில் எழுந்தருள்கிறார்.
காலை 7.25 மணியளவில் வைகை ஆற்றிலிருந்து ராமராயர் மண்டகப் படிக்கு புறப்படுகிறார். அங்கு நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் தண்ணீர் பீய்ச்சி அடித்து கள்ளழகரை குளிர்விப்பார்கள். அன்றிரவு வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் தங்குகிறார்.
மே 2-ம் தேதி தேனூர் மண்டகப்படியில் மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிக்கிறார். அன்றிரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் நடைபெறும்.
மே 3-ல் ராமராயர் மண்டகப்படியிலிருந்து அனந்தராயர் பல்லக்கில் ராசாங்க திருக்கோலத்தில் ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்துக்கு புறப் படுகிறார். மே 4-ல் ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் அதிகாலை 2.30 மணியளவில் பூப்பல்லக்கில் கள்ளழகர் திருக்கோலத்தில் எழுந்தருள்கிறார்.
கருப்பணசாமி கோயில் சந்நிதியில் வையாளியாகி தல்லாகுளம் பெருமாள் கோயிலில் எழுந்தருளி மலைக்கு திரும்புகிறார். மே 5-ல் காலை 10.40 மணியளவில் கோயிலை அடைகிறார். 6-ம் தேதி உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவுபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் ரா.ஹரிஹரன் தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.