

வடலூர் சத்திய ஞான சபையில் நேற்று 7 திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. இதை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். | படங்கள்: எம்.சாம்ராஜ் |
கடலூர்: வடலூர் சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசனம் நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள சத்திய ஞான சபையில் 155-வது ஜோதி தரிசன விழாவையொட்டி நேற்று முன்தினம் சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து, நேற்று சத்திய ஞான சபையில் காலை 6 மணிக்கு முதல் ஜோதி தரிசனம் நடைபெற்றது.
தொடர்ந்து, காலை 10 மணி, நண்பகல் 1 மணி, இரவு 7 மணி, இரவு 10 மணி, இன்று (பிப். 2) காலை 5.30 மணிக்கு 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.
ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு “அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை, அருட்பெருஞ்ஜோதி” என்ற முழக்கத்துடன் ஜோதி தரிசனம் செய்தனர்.
நாளை பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை மேட்டுக்குப்பத்தில் சித்திவளாகத் திருஅறை தரிசனம் நடைபெறுகிறது. விழாவையொட்டி, பக்தர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் இந்து சமய அறநிலையத் துறையினர் செய்துள்ளனர். மேலும், வடலூருக்கு சிறப்பு ரயில்கள், சிறப்பு பேருந்துகள் இயங்கப்பட்டன.
விழுப்புரம் டிஐஜி அருள் அரசு, கடலூர் எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில் நெய்வேலி டிஎஸ்பி ராஜேந்திரன், வடலூர் காவல் ஆய்வாளர் உதயகுமார் மற்றும் 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
தைப்பூச ஜோதி தரிசன விழாவையொட்டி வெளி மாவட்டம், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வடலுரில் குவிந்திருந்தனர். தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, அமைச்சர்கள் எம்ஆர்கே.பன்னீர்செல்வம், டிஆர்பி.ராஜா, மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆகியோர் கலந்துகொண்டு ஜோதி தரிசனம் செய்தனர்.