குற்றவாளியை பிடிக்க முயன்ற எஸ்ஐ-க்கு அரிவாள் வெட்டு

குற்றவாளியை பிடிக்க முயன்ற எஸ்ஐ-க்கு அரிவாள் வெட்டு
Updated on
1 min read

பொன்னேரி: சென்னை வில்லிவாக்கம் காவல் நிலைய சரித்திரப் பதிவேடு குற்றவாளியான பூபாலன், மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு பகுதியில் பதுங்கி இருப்பதை அறிந்த சென்னை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் செல்போன் சிக்னல் மூலம் அவரை பிடிக்க பின் தொடர்ந்தனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் வெங்கடேஷ் உட்பட இருவர் அத்திப்பட்டு பகுதியில் உள்ள வீட்டுக்கு சென்று பூபாலனை பிடிக்க முற்பட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பூபாலன் கூட்டாளிகள் உதவி ஆய்வாளர் வெங்கடேஷை அரிவாளால் தலையில் வெட்டி அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இதையடுத்து தலையில் காயமடைந்த உதவி ஆய்வாளர் வெங்கடேஷ், மீஞ்சூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் குறித்து செங்குன்றம் துணை ஆணையர் மகேஸ்வரி தலைமையில் போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் சரித்திர பதிவேடு குற்றவாளி பூபாலன் அத்திப்பட்டில் வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தது தெரிய வந்துள்ளது.

அங்குள்ள சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து தப்பியோடிய குற்றவாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உதவி ஆய்வாளர் வெங்கடேஷ் மீஞ்சூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குற்றவாளியை பிடிக்க முயன்ற எஸ்ஐ-க்கு அரிவாள் வெட்டு
குன்றத்தூர்: காவலரை கத்தியால் வெட்டிவிட்டு தப்பியோடிய ரவுடியை காலில் சுட்டுப் பிடித்த போலீஸார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in