வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் புதிய கொடிமரம்

வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் புதிய கொடிமரம்
Updated on
1 min read

கடலூர்: வடலூர் சத்திய ஞானசபையில், அகவல் பாராயணம் பாடப்பட்டு 39 அடி உயரமுள்ள புதிய கொடிமரம் இன்று நிறுவப்பட்டது.

கடலூர் மாவட்டம், வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞானசபை உள்ளது. அங்கு மாதம் தோறும் பூச நட்சத்திரத்தன்று ஆறு திரைகளை நீக்கி மாத ஜோதி தரிசனம் நடைபெறும். தை மாத பூச நட்சத்திரத்தன்று ஏழு திரைகளை நீக்கி தைப்பூச ஜோதி தரிசன விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

இந்த ஜோதி தரிசன பெருவிழாவை காண்பதற்காக உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவர். வள்ளலார் நிறுவிய தர்ம சாலையில் அணையா அடுப்பு மூலம் மூன்று வேளையும் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது.

சத்திய ஞான சபை உருவாக்கப்பட்ட போது நிறுவப்பட்ட கொடிமரம் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இருந்ததால் பழுதடைந்தது. அதை அகற்றிவிட்டு புதிய கொடிமரம் நிறுவ முடிவு செய்யப்பட்டது. சத்திய ஞானசபை மற்றும் பெருவெளி அமைய இடம் தந்து உதவிய பார்வதிபுரம் கிராம மக்களே, புதிய கொடிமரத்தை நிறுவ முன்வந்தனர். ரூ.25 லட்சம் மதிப்பில் 39 அடி உயரமுள்ள புதிய கொடிமரம் கடந்த 8 மாதங்களாக தயாரிக்கப்பட்டது.

இன்று காலை சத்திய ஞானசபையில், அகவல் பாராயணம் பாடப்பட்டு 39 அடி உயரமுள்ள புதிய கொடிமரத்தினை பார்வதிபுரம் கிராம மக்களால் முறைப்பட்டி நிறுவப்பட்டது. அப்போது கூடியிருந்த ஏராளமான சன்மார்க்க நெறியினர் "அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி" என்ற வள்ளலாரின் மகா மந்திரத்தை உச்சரித்தவாறு புதிய கொடிமரத்தை நிறுவினர்.

மேலும் புதிய கொடிமரத்தில் பீடம் மற்றும் செப்புத்தகடுகள் பதித்த பின்பு வள்ளலார் அவதரித்த நன்னாளும் மாதப்பூச நாளுமாகிய 05.10.2026 (புரட்டாசி - 18) திங்கட்கிழமை காலை 9.00 மணியளவில் பார்வதிபுரம் அம்மன் கோயிலில் இருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க சீர்வரிசையோடு ஊர்வலமாக வந்து சன்மார்க்கக் கொடி ஏற்றப்பட உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை பார்வதிபுரம் கிராம மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் புதிய கொடிமரம்
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்​பாபிஷேக விழாவில் முதல்வர் விஜய் பங்கேற்க மாட்டார்: அமைச்சர் நிர்மல் குமார் தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in