

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் நேற்று குரு பகவானுக்கு நடைபெற்ற தீபாராதனை.
திருவாரூர்: ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் உள்ள குரு பகவான் சந்நிதியில் குருப் பெயர்ச்சி விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. குரு பகவான் நேற்று முற்பகல் 11 மணியளவில் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார்.
இதை முன்னிட்டு, திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர் குரு பரிகார கோயிலில் குருப் பெயர்ச்சி விழா கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி, கோயிலில் தனி சந்நிதியில் உள்ள குரு பகவானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, குரு பகவானை வழிபட்டனர். பக்தர்கள் நெரிசல் இன்றி வழிபட கோயில் நிர்வாகம் தரப்பில் கோயில் வளாகத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன.
தொடர்ந்து, குருப் பெயர்ச்சிக்கான லட்சார்ச்சனை விழா நாளை (மே 28) தொடங்கி ஜூன் 4-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
அந்த நாட்களில் காலை 9 மணி முதல் பகல் 12 மணிவரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையும் லட்சார்ச்சனை நடைபெறும்.
இந்த லட்சார்ச்சனையில் மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் பங்கேற்று பரிகாரம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.