

திருவண்ணாமலை: ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ கோஷத்துடன் திருவண்ணாமலையில் நடந்த மகா தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து இழுத்தனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது கார்த்திகை தீபத் திருவிழா. இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது.
விழாவின் 7-ம் நாளான நேற்று மகா தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
பின்னர், ராஜகோபுரம் எதிரே அலங்கரிக்கப்பட்ட ரதங்களில் சிறப்பு அலங்காரத்தில் பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி,தெய்வானை சமேத முருகர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் அவர்களுக்குரிய ரதங்களில் எழுந்தருளினர். உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் மகா ரதத்தில் எழுந்தருளினார்.
அதைத் தொடர்ந்து பஞ்ச ரதங்கள் வீதியுலா தொடக்கியது. முதலாவதாக விநாயகருக்கு தீபாராதனை செய்யப்பட்டு காலை 7.05 மணிக்கு தேர் புறப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். விநாயகர் தேர் மாடவீதியில் வலம்வந்து நிலையை வந்தடைந்த, பின்னர் காலை 11 மணி அளவில் முருகர் தேர் புறப்பட்டது. இதில், வள்ளி, தெய்வானையுடன் முருகப் பெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முருகர் தேர் பகல் 2 மணி அளவில் நிலையை வந்தடைந்தது.
அதைத் தொடர்ந்து, சுவாமி தேர் என அழைக்கப்படும் மகா தேரோட்டம் மாலை 3.15 மணிக்கு தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உதயகுமார், போளூர் எம்எல்ஏ அபிஷேக், கோயில் இணை ஆணையர் பரணிதரன் மற்றும் நகர முக்கிய பிரமுகர்கள் உட்பட பலர் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். மாடவீதியில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என்ற பக்தி முழக்கமிட்டபடி வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
மாடவீதிகளில் வலம் வந்த தேர், இரவு 10.30 மணி அளவில் நிலைக்கு வந்தது. அதன்பின்னர், இரவு 11 மணி அளவில் அலங்கார ரூபத்தில் எழுந்தருளிய பராசக்தி அம்மனின் தேரோட்டம் நடைபெற்றது. அம்மன் தேரை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். நிறைவாக சண்டிகேஸ்வரர் தேரோட்டம் நடைபெற்றது.
பஞ்ச மூர்த்திகள் தேரோட்டம் காலையில் தொடங்கி இரவு முழுவதும் விடிய விடிய வீதியுலா நடைபெற்றது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மாடவீதி முழுவதும் திரண்டிருந்தனர். வடக்கு மண்டல ஐஜி பிரவீன் குமார் அபினபு தலைமையில் 4,600 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அண்ணாமலையார் கோயிலில் 24-ம் தேதி காலை பரணி தீபமும், மாலையில் மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது.