

திண்டுக்கல்: கொடைக்கானல் குறிஞ்சியாண்டவர் கோயிலில் இன்று (மே 29) வெள்ளிக்கிழமை காலை மலர் வழிபாட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள குறிஞ்சியாண்டவர் கோயில் 1936-ம் ஆண்டு ஆங்கிலயேர் ஒருவரால் கட்டப்பட்டது. இக்கோயில் பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலின் உப கோயிலாகும். இக்கோயிலின் குன்றில் குறிஞ்சி மலர்கள் பூத்து குலுங்கியதால் குறிஞ்சி ஆண்டவர் என்று பக்தர்கள் பக்தியோடு அழைத்ததால் இப்பெயர் வரக்காரணம் என கூறப்படுகிறது.
இக்கோயிலுக்கு உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகள், வெளிநாட்டினர் அதிகளவில் வருகின்றனர். அதனால் கோயில் நடை தினமும் காலை 6.30 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 7.30 மணி வரை நடை சாத்தப்படாமல் திறந்தே இருக்கும். இக்கோயிலில் வழக்கமாக முருகன் கோயிலில் நடைபெறும் விழாக்களுடன் மே மாதம் மலர் வழிபாட்டு விழா விமரிசையாக நடத்தப்படும்.
அதன்படி, இந்தாண்டு வெள்ளிக்கிழமை (மே 29) காலை மலர் வழிபாட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி, குறிஞ்சியாண்டவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆதாராதனைகள் நடைபெற்றது. விழாவில், கோயில் உதவி ஆணையர் செந்தில்குமார், கண்காணிப்பாளர் சத்திய நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மலர் வழிபாட்டு விழாவையொட்டி கோயில் முழுவதும் டன் கணக்கிலான வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கோயில் வளாகத்தில் பூக்களால் கோலம் போடப்பட்டிருந்தது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.