

வேளாங்கண்ணி ஆண்டுப் பெருவிழாவை முன்னிட்டு நேற்று நடைபெற்ற பெரிய தேர் பவனியில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். தேரில் எழுந்தருளிய ஆரோக்கிய அன்னை.
நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் வேளாங் கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டுப் பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர் பவனி நேற்று இரவு கோலாகலமாக நடை பெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு மரியே வாழ்க என முழக்கமிட்டனர்.
வேளாங்கண்ணியில் உள்ள பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் மாதா பிறந்தநாள், ஒவ்வொரு ஆண்டும் 11 நாட்கள் பெருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான பெருவிழா கடந்த மாதம் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதன்பின் பேராலயம், விண்மீன் ஆலயம், மாதாகுளம் ஆலயம், மேல் கோயில், கீழ் கோயில் ஆகிய ஆலயங்களில் தினமும் காலை 5 மணிக்கு தமிழ், மராத்தி, ஆங்கிலம், கொங்கணி, கன்னடம், தெலுங்கு, இந்தி, கிழக்கத்திய மராத்தி ஆகிய மொழிகளில் சிறப்பு திருப்பலி நடைபெற்று வந்தது. பல்வேறு மாநிலங்களில் இயற்கை சீற்றத்தால் உயிரிழந்தவர்களுக்காகவும், உலக அமைதிக்காகவும் இந்த நவ நாட்களில் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது.
ஆண்டுத் பெருவிழாவின் மிக முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர் பவனி நேற்று மாலை நடைபெற்றது. அதை முன்னிட்டு ஜெபமாலை, மாதா மன்றாட்டு, நவநாள் ஜெபம் ஆகியவை நடைபெற்றன. அதைத்தொடர்ந்து சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. பின்னர் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் மாதா சொரூபம் வைக்கப்பட்டது. தஞ்சை மறைமாவட்ட ஆயர் சகாயராஜ் தேரை புனிதம் செய்து வைத்தார். பின்னர் அவர் தலைமையில் உலக நன்மைக்காக மும்மத பிரார்த்தனை நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து, பெரிய தேரின் முன்பு 6 சிறிய தேர்களில் மிக்கேல் சம்மனசு, செபஸ்தியார், அந்தோனியார், சூசையப்பர், உத்திரிய மாதா, அமலோற்பவ மாதா ஆகியோர் எழுந்தருளினர். இதையடுத்து, ஆரோக்கிய மாதா எழுந்தருளிய பெரிய தேரை ஏராளமான பக்தர்கள் சுமந்து சென்றனர்.
வேளாங்கண்ணி பேராலய முகப்பில் இருந்து தொடங்கிய பெரிய தேர்பவனி கடற்கரை சாலை, ஆரியநாட்டுத் தெரு, உத்திரியமாதா தெரு, கடைவீதி வழியாக மீண்டும் பேராலயத்தை வந்தடைந்தது. அப்போது, ‘மரியே வாழ்க’, ‘ஆவே மரியா’ என பக்தர்கள் முழக்கமிட்டனர்.
தேர் பவனியில், பேராலய அதிபர் இருதயராஜ், உதவி அதிபர் அற்புதராஜ் மற்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
விழாவை முன்னிட்டு நாகை எஸ்பி கேழ்கர் சுப்ரமணிய பாலச்சந்திரா தலைமையில் 4 மாவட்டங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பல்வேறு மாநிலங்களில் இருந்து சிறப்பு ரயில்களும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன.
தொடர்ந்து, ஆரோக்கிய மாதாவின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு இன்று (செப்.8) காலை பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.