

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கை பணத்தை அரசு வங்கிகளில் டெபாசிட் செய்து, அதன் மூலம் வரும் வட்டியில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் பக்தர்களும் அன்னதானத்துக்கு நன்கொடையும் வழங்கி வருகின்றனர். தற்போது நாள் ஒன்றுக்கு அன்னதானம் செய்ய திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரூ.44 லட்சம் கட்டணமாக நிர்ணயித்துள்ளது.
சாதாரண நாட்களில் 1.90 லட்சம் பேர் வரையிலும், சனி, ஞாயிறுக்கிழமைகளில் சுமார் 2 லட்சம் பேருக்கும், வைகுண்ட ஏகாதசி, பிரம்மோற்சவம், ரதசப்தமி போன்ற விசேஷ நாட்களில் தினமும் 2 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா அன்னதான அறக்கட்டளை மூலம் சென்னை, வேலூர் உட்பட 60-க்கும் மேற்பட்ட தேவஸ்தான கோயில்களில் அன்னதானம் வழங்க வேண்டுமென ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பிறப்பித்த உத்தரவை திருப்பதி தேவஸ்தானம் விரைவில் அமல்படுத்த தீர்மானித்துள்ளது.