

சென்னை: சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில், மாதாவின் பிறந்த நாளை முன்னிட்டு ஆண்டுதோறும் 11 நாட்கள் பெருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 54-வது ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சென்னை மயிலை உயர்மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி 75 அடி உயர கொடிக்கம்பத்தில் 12 அடி நீளம் கொண்ட அன்னை மாதாவின் உருவம் பொறித்த கொடியை ஏற்றி, கூட்டு திருப்பலியை நடத்தினார். கொடியேற்ற விழாவுக்கு சென்னை மட்டுமின்றி, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட அண்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நடை பயணமாக வந்து வழிபாடு செய்தனர்.
இன்று முதல், பக்த சபைகள் விழா, நற்கருணை பெருவிழா, தேவ அழைத்தல் விழா, உழைப்பாளர்கள் விழா, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழா, ஆசிரியர்கள் விழா, குடும்ப விழா, அன்னையின் பிறப்பு பெருவிழா என ஒவ்வொரு நாளும் சிறப்பு திருப்பலிகளும், ஜெப வழிபாடுகளும் காலையில் இருந்து மாலை வரை நடைபெறும்.
விழாவின் முக்கிய நிகழ்வான அன்னையின் தேர்பவனி வரும் செப்.7-ம் தேதி மாலை நடைபெற உள்ளது. இதில் பல ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து கலந்து கொள்வார்கள். 8-ம் தேதி அன்னை மாதாவின் பிறந்த நாளையொட்டி அதிகாலை 2 மணி முதல் மாலை 5 மணி வரை திருப்பலிகள் நடைபெற உள்ளன.
காலை 7.45 மணிக்கு ஆங்கில திருப்பலியும், 9.30 மணிக்கு தமிழ் திருப்பலியும், அன்னைக்கு மணிமுடி சூட்டும் விழாவும் நடைபெறும். மாலை 5.30 மணிக்கு நடைபெறும் திருப்பலியை தொடர்ந்து கொடியிறக்க நிகழ்வுடன் இந்த ஆண்டு திருவிழா நிறைவடைகிறது.
ஆலய வளாகம் மற்றும் பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப் படுகிறது. தேர் பவனி உள்ளிட்ட முக்கிய நாட்களில் பெசன்ட் நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.