

சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை பெருந்திருவிழாவின் தொடக்கமாக நேற்று நடைபெற்ற கொடியேற்றம். (உள்படம்) சிறப்பு அலங்காரத்தில் சமயபுரம் மாரியம்மன். படங்கள்: ர.செல்வமுத்துகுமார்
திருச்சி: திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை பெருந்திருவிழாவின் தொடக்கமாக கொடியேற்றம் நேற்று நடைபெற்றது.
சக்தி தலங்களில் முதன்மையாக விளங்கும் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு சகல சவுபாக்கியங்களும் கிடைக்க, அம்மனே பக்தர்களுக்காக ஆண்டுதோறும் மாசி கடைசி ஞாயிறு முதல் 28 நாட்கள் பச்சைப்பட்டினி விரதம் இருப்பது வழக்கம். பச்சைப் பட்டினி விரதம் முடிவடைந்தவுடன் அம்மனுக்கு நைவேத்தியம் படைத்து, சித்திரை பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கும்.
அதன்படி, நிகழாண்டு மார்ச் 8-ம் தேதி அம்மன் பச்சைப் பட்டினி விரதம் தொடங்கி நேற்று காலையுடன் முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து, சித்திரைப் பெருந்திருவிழாவின் தொடக்கமாக கொடியேற்றம் நடைபெற்றது. இதையொட்டி, சிறப்பு மலர் அலங்காரத்தில் உற்சவ மாரியம்மன் தங்க கொடிமரம் முன்பு எழுந்தருளியதும், கொடிமரத்துக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட திரவியப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகளுக்கு பிறகு காலை 8 மணியளவில் சித்திரை பெருந்திருவிழா கொடியேற்றப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து, இன்று (6-ம் தேதி) சிம்ம வாகனம், 7-ம் தேதி பூத வாகனம், 8-ம் தேதி அன்னபட்சி வாகனம், 9-ம் தேதி ரிஷப வாகனம், 10-ம் தேதி யானை வாகனம், 11-ம் தேதி சேஷ வாகனம், 12-ம் தேதி மரக் குதிரை வாகனம், 13-ம் தேதி வெள்ளிக் குதிரை வாகனத்தில் வீதியுலா நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப்.14-ம் தேதி நடைபெறுகிறது. அன்று காலை 10.31 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் மிதுன லக்னத்தில் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்வு நடைபெற உள்ளது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர்.