

கோவில்பட்டி: கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயில் கந்த சஷ்டி விழாவில் இன்று தாரகாசுரன் சம்ஹாரம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
தென் தமிழகத்தின் எல்லோரா என்று அழைக்கப்படும் பிரசித்தி பெற்ற குடைவரை கோயிலான கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் கந்த சஷ்டி விழா கடந்த 10-ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
விழா நாட்களில் தினமும் சுவாமி கழுகாசலமூர்த்தி வள்ளி, தெய்வானை அம்மன்களுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபாராதனை நடந்து வருகிறது. மேலும், வள்ளி, தெய்வானையுடன் கழுகாசலமூர்த்தி சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சியும் நடந்து வருகிறது.
விழாவின் 5-ம் நாளான இன்று காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு கழுகாசலமூர்த்தி வள்ளி, தெய்வானை அம்மன்களை எழுந்தருளச் செய்யும் சிறப்பு பூஜைகளும் நடந்தன. தொடர்ந்து சுவாமி கழுகாசலமூர்த்தி, வள்ளி, தெய்வானையுடன் வெள்ளிச்சப்பரத்தில் எழுந்தருளி திருவீதியுலா வந்தார்.
அப்போது தூது சென்ற வீரபாகுவை சூரர்கள் சிறைப்பிடிக்கும் நிகழ்ச்சியும், அவரை மீட்க பகல் 12 மணிக்கு சுவாமி வீரவேல் ஏந்தி மயில் வாகனத்தில் போர்க்களத்தை அடையும் நிகழ்ச்சியும் நடந்தது.
அங்கு சுவாமி சார்பில் நாரதர் முருகாற்றுபடை பாடல்கள் பாடியபடி சூரபத்மனிடம் 3 முறை தூது சென்றார். தூது படலத்தில் சமரசம் ஏற்பாடாததை தொடர்ந்து தாரகாசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. சுவாமி கழுகாசலமூர்த்தி தாரகாசுரனை சம்ஹாரம் செய்தார். இதில் அங்கு திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் “வெற்றி வேல், வீர வேல்” என கோஷங்கள் எழுப்பி வழிபட்டனர்.
வதம் முடிந்ததும் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. கந்த சஷ்டி விழாவின் 5-வது நாள் கழுகுமலை கோயிலில் நடக்கும் தாரகாசுரன் சம்ஹாரம் வேறு எந்த முருகன் கோயிலிலும் நடைபெறாது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து கோயிலில் சுவாமி கழுகாசலமூர்த்திக்கும், அம்மன்களுக்கும் சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனைகளும் நடந்தது. இரவு 8 மணிக்கு மேல் சுவாமி அன்ன வாகனத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து, திருக்கோயிலை வந்தடைந்தார். கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரம்ஹாரம் நாளை (15-ம் தேதி) நடக்கிறது.
இதையொட்டி நாளை காலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு உதய மார்த்தாண்ட அபிஷேகம், 5.30 மணிக்கு கழுகாசலமூர்த்தி வள்ளி, தெய்வானை அம்மனை எழுந்தருளச் செய்யும் பூஜைகளும் நடக்கிறது. மதியம் 12 மணியளவில் சண்முகருக்கு சிறப்பு அபிஷேகங்களும், அர்ச்சனை வழிபாடுகளும் நடக்கிறது.
பிற்பகல் 3 மணிக்கு வீரவேல் ஏந்தி சுவாமி வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி போர்க்களம் வருதலும், 5 மணிக்கு கோயில் தெற்கு வாசல் முன்பு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள செய்து வருகின்றனர்.