“முதல்வர் விஜய் ஓர் ஆறுதல் வார்த்தை கூட...” - செஞ்சி சிறுமி குடும்பத்தினரை சந்தித்த கனிமொழி காட்டம்

“முதல்வர் விஜய் ஓர் ஆறுதல் வார்த்தை கூட...” - செஞ்சி சிறுமி குடும்பத்தினரை சந்தித்த கனிமொழி காட்டம்
Updated on: 
2 min read

செஞ்சி: “தமிழக வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு பெண்களுக்கு எதிராகவும், குழந்தைகளுக்கு எதிராகவும் குற்றங்கள் நடக்கிறது. முதல்வருக்கே தன் ஆட்சியில் தனக்குப் பாதுகாப்பு இருக்கும் என்ற ஒரு நம்பிக்கை இல்லாத ஒரு நிலைமை உள்ளது” என்று திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

செஞ்சியில் காணாமல் போன சிறுமியின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, “இரண்டாம் வகுப்பு படிக்கக் கூடிய ஏழு வயது சிறுமி ஹேமாவதி தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடிய அடுத்த நாள் காலையிலிருந்து காணவில்லை.

அந்த ஏழு வயது சிறுமி காணாமல் போய் இன்று வரைக்கும் கிட்டத்தட்ட 35 நாட்கள் ஆகிறது. ஆனால், அந்தக் குழந்தையைக் கண்டுபிடிக்க இந்த அரசாங்கம் உண்மையாகவே எதையும் செய்ததாகத் தெரியவில்லை.

குழந்தையைக் காணவில்லை என சொன்ன உடனே போய் கம்ப்ளைன்ட் கொடுத்துள்ளார்கள். 2013-ல் ஒரு வழக்கில், நோபல் பரிசு வாங்கி இருக்கக்கூடிய கைலாஷ் சத்யார்த்தி போட்ட வழக்கில் கொடுத்திருக்கக் கூடிய உச்ச நீதிமன்ற உத்தரவில், ஒரு குழந்தையை காணவில்லை என்றால், குழந்தை 'மிஸ்ஸிங்' என்று எஃப்.ஐ.ஆர் போடக் கூடாது. 24 மணி நேரத்துக்குள் அந்தக் குழந்தை ‘கடத்தல்’ அப்படி என்றுதான் பதிவு செய்ய வேண்டும். ஆனால் ஏன் 'மிஸ்ஸிங்' என்று பதிவு செய்துள்ளார்கள் எனத் தெரியவில்லை.

அரசு இதைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் உள்ளது. சைல்ட் வெல்ஃபேர், காவல் துறை இரண்டுமே முதல்வர் விஜய்யின் நேரடிப் பார்வையில் இருக்கக்கூடிய துறைகள். இதே குழந்தைகளைப் பார்த்துதான் "நண்பா, நண்பி" என்று சொல்லி, அந்தக் குழந்தைகளிடம் கேட்டு, அந்தக் குழந்தைகளை வீட்டில் போய் அடம் பிடிங்கன்னு சொல்லிதான் ஓட்டு வாங்கி இந்தப் பதவியில உட்கார்ந்து இருக்கிறார்.

நேற்று குழந்தைகளுக்கு கேக் ஊட்டி விட்டு இருக்கிறார் முதல்வர். கேக் ஊட்டப் போகும் முதல்வர், இந்த வீட்டுக்கு வந்து இந்தப் பெற்றோர்களுக்கு ஓர் வார்த்தை ஆறுதல் சொல்லி இருக்கலாம். “நாங்க நிச்சயமாக அந்தக் குழந்தையைக் கண்டுபிடிச்சுக் கொடுத்திடுவோம்” என்று சொல்லி இருக்கலாம். அவர் கூட வர வேண்டாம். இங்க இருக்கக் கூடிய பொறுப்பு அமைச்சராவது வந்து இந்தக் குடும்பத்தில் யாரையாவது பார்த்து ஓர் ஆறுதல் வார்த்தை சொல்லி இருக்கிறார்களா? இந்தக் குழந்தையைக் கண்டுபிடிப்பதற்கு எந்தவித முயற்சியும் இல்லை.

35 நாள் ஆகியும் குழந்தையின் பெற்றோர்களுக்கு ஆறுதலாக, நம்பிக்கை தரக்கூடிய வகையில் அரசு எதையும் செய்யவில்லை. தவெக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தவுடன் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது. கடலூரில் மட்டும் கிட்டத்தட்ட பல குழந்தைகள் ஒரே நாளில் காணாமல் போயிருக்கக் கூடிய ஒரு மிகப் பெரிய அவலம் நடந்துள்ளது. கடலூரில் கல்லூரி மாணவ, மாணவிகள், வேலைக்குப் போகும் பெண்கள், ஒரு குழந்தை, அவரது அம்மா இருவரையும் காணவில்லை. இத்தனைக்கும் இந்த அரசாங்கம் என்ன பதில் சொல்லப் போகிறது?

ஆனால், எதைப் பற்றியும் கவலைப்படாமல், முதல்வர் விஜய் உள்ளார். ஏனென்றால், முதல்வரே தன் பாதுகாப்பைப் பற்றி பயப்படக் கூடிய அளவு, நேற்று கொளத்தூர் சென்றவர் யாரோ அவரின் ரசிகர் வந்த உடனேயே பயந்துவிட்டார். இப்படிப்பட்ட ஆட்சியை அவர்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

குழந்தைகளுக்குக் கூட பாதுகாப்பு தர முடியாத ஒரு தரம் இல்லாத ஓர் ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாமல் ஒரு முதல்வர் அவருடைய நேரடித் துறைகளில் தவறுகள் நடக்கும்போது கூட வாயைத் திறக்கவில்லை என்றால், இப்படிப்பட்ட ஒரு முதல்வரை இதுவரை தமிழகம் பார்த்ததே கிடையாது” என்றார்

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், “தமிழக வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு பெண்களுக்கு எதிராகவும், குழந்தைகளுக்கு எதிராகவும் குற்றங்கள் நடக்கிறது. ஆனால், அதையும் நியாயப்படுத்துகிறார்கள். "போன வருடம் தீபாவளிக்கு இத்தனை குற்றங்கள் நடந்தது. அதுக்கு முந்தின வருடம் இவ்வளவு நடந்தது. இந்த வருடம் இவ்வளவு நடந்துள்ளது" என்று இதுக்கு ஒப்பீடுகள் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஆளும் கட்சியில் இருக்கக் கூடியவர்கள் மனசாட்சியோடு இந்த மாதிரி குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு காவல் துறையைப் பயன்படுத்த வேண்டும். அதை விட்டுவிட்டு தன்னுடைய பாதுகாப்புக்கு, தனக்காக மட்டுமே இந்த அரசாங்கத்தை அவர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். முதல்வருக்கே தன்னோட ஆட்சியில் தனக்குப் பாதுகாப்பு இருக்கும் என்ற ஒரு நம்பிக்கை இல்லாத ஒரு நிலைமை உள்ளது” என்றார்.

“முதல்வர் விஜய் ஓர் ஆறுதல் வார்த்தை கூட...” - செஞ்சி சிறுமி குடும்பத்தினரை சந்தித்த கனிமொழி காட்டம்
“சினிமாவாக இருந்தால் குற்றவாளிகளை தொங்கவிட்டு மாஸ் பிஜிஎம் போட்டிருப்பார்” - இபிஎஸ் தாக்கு

X